Thursday 8 August 2019

ஊர்வசி மயக்கம்



ஊர்வசி மயக்கம்
"சித்திரசேனா,   சபையிலே நடந்த நாட்டியத்தை  என் மகன்  அர்ஜுனன் கண்கொட்டாமல் ரசித்தானே கவனித்தாயா?"
"கவனித்தேன் பிரபோ !"
"என்ன முடிவுக்கு வந்தாய்?"
" அவன் தங்கள் புத்திரன்  அல்லவா?தந்தையின் ரசனை  மகனுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அர்ஜுனன்உங்கள் கீர்த்திக்கு முடி சூட்டுவான்."
" முகஸ்துதி  வேண்டாம்  சித்திரசேனா..கேட்டுக்கேட்டுக் காது புளித்துவிட்டது. நேர்மையோடு சொல்."
"அர்ஜுனனின் கண்கள்  ஊர்வசி நாட்டியம் ஆடும்போது அவளது   ஒயிலான  இடை அசைவையும் கண்களின் வெட்டையும் வீச்சையும் கைவீச்சின் எழிலையும் மாறி மாறிப்பார்த்துக்கொண்டே இருந்தன"
ஆக மொத்தம்?"
"அவன் தேன் கிண்ணத்தில் விழுந்த  ஈயைப் போல தத்தளித்தான்"
"மெச்சுகிறேன் உன் தீட்சண்யமான  கிரகிக்கும் ஆற்றலை ."
"ஊர்வசியின் வசிய சக்தியில் ஓர்   ஆக்கிரஹம் உண்டு..எவரையும் அவள் ஈர்த்துவிடுவாள்நடனக்கலையை  அர்ஜுனனுக்குக் கற்றுக்கொடுக்கும்போது ஒன்றை உணர்ந்தேன்."
"என்ன உணர்ந்தாய்?"
"அவன் அடிப்படையில் கலைஞன். அழகின் உபாசகன் . எழில் தென்படும் இடத்தில் எல்லாம் அவன் ஈர்க்கப்படுவான்."
" ஆனால் அவன் அழகை உபாசிக்க இந்திர லோகத்திற்கு வரவில்லை."
" தெரியும் மஹாப்ரபோ! அவனிடமிருக்கும் அஸ்திரங்கள் போதுமானதல்ல. தந்தையிடம் மேலும் சக்தி வாய்ந்த அஸ்திரங்களை வாங்கிக்கொள்ளவே வந்திருக்கிறான்."
"அஸ்திரம் வாங்க வந்த இடத்தில் அழகுக்கலையில் கட்டுண்டு மயங்கி நிற்கிறானே ! நான் அளிக்கும் அஸ்திரங்களை போர்க்களத்தில் பிரயோகிக்கத் தொடங்கும் போது ஊர்வசியின் மோகனாஸ்திரம் தானே முதலில் கவனம் வரும்! கவனம் சிதறினால் அஸ்திரம் செயலிழக்கும்!"
"மகேந்திரா,பாண்டவர்களும் கௌரவர்களும் வில்வித்தை பயின்றபோது துரோணர் தன் குறியின் மீதே கண் வைத்திருந்த அர்ஜுனனை மெச்சியிருக்கிறாரே"
"அது வேறு. அன்று அவன் இளைஞன்.அவன் செய்த முயற்சியால் வந்தது அந்தப்  பயிற்சி.ஊர்வசி எல்லாப்பயிற்சியையும் புறம் தள்ளக்கூடிய கவர்ச்சி.. எல்லா வித்தைகளையும் வென்று விடும் அவள் எழில் ."
" தங்கள் உள்ளக்கருத்தில் ஓடும் எண்ணத்தை அறிய விரும்புகிறேன்."
"இந்திரலோகத்தை விட்டுப்போகும்போது  அவன் அஸ்திரங்களோடு மட்டும் தான் போகவேண்டும்.அவனது எண்ணம் ஊர்வசியின் கவர்ச்சியில் இருந்து விடுபட்டுச்செல்லவேண்டும்.
" விளக்கவேண்டும் மஹாப்ரபோ"
ஆசை தீர்ந்தால் தான் விடுதலை. ஆகவே.."
"சொல்லுங்கள் தேவதேவா."
"ஊர்வசியிடம் போ. நான் கூறியதாக அவளிடம் அர்ஜுனன் கொண்டிருக்கும் மோகமயக்கத்தைச் சொல். இன்று இரவு அவன் அவளை அனுபவிக்கும் உல்லாச சுகத்தை வழங்கச்சொல்.அது தீர்ந்தால் அர்ஜுனனின் மதி தெளிவாகி விடும்"
"நானா மகேந்திரா?"
" ஆம்.நீ தான் அவளிடம் போகவேண்டும்.அர்ஜுனன் உன் பிரியமான நாட்டிய
மாணவன். அது அவளுக்குத் தெரியும் .நீ சொன்னால் அவள் இசைவாள்"
"தங்கள் ஆணை"
"தற்குத்தயங்கித் தயங்கி நிற்கிறாய் சித்திரசேனா?"
" ஊர்வசி தேவி!மகேந்திரபூபதி என்னிடம் ஒரு கட்டளையைக்கூறி அனுப்பினார்"
"அப்படியா? சொல்லவேண்டியது தானே! என்ன தயக்கம்?"
"அதை வாய் விட்டு சொல்ல முடியவில்லை."
"என் மீதுள்ள மரியாதை தடுக்கிறதோ?"
"ஆம் தேவி! அதை ஒதுக்கிவை. என்னை உன் தோழியாக நினைத்துக்கொள். சொல்."
"அர்ஜுனன் உங்களுக்காக ஏங்குகிறான். இன்று இரவு அவன் ஏக்கத்தை நீங்கள் அவன் நிறைவடையும் விதத்தில் தீர்த்து வைக்கவேண்டும்."
.........................................
"ஏன் சிரிக்கிறீர்கள் ஊர்வசி தேவி?"
"சிரித்தேனா?"
"ஆம்..ஒரு பூரிப்பான சிரிப்பு"
"நீ என்னை ஒரு தோழியாகக்கருதித் தானே இதைச் சொன்னாய் சித்திரசேனா?"
"சந்தேகமே வேண்டாம்.ஏன் இந்தக்கேள்வி?"
"ஒரு தோழியின் உள்ளத்தை ஆணானானால் என்ன பெண்ணானால் என்ன பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா?"
"நிச்சயமாக"
"சித்திரசேனா..பெண்ணின் உள்ளம் ஆழ்கடல் என்பார்கள். அந்த ஆழத்திற்கும்  கீழே ஒரு தரை தட்டுப்படும் அல்லவா?"
"ஆம் தேவி!"
"எல்லா உலகினரையும் வசியம் செய்யும் இந்த ஊர்வசியையும் கவர்ந்து இழுத்துவிட்டான் ஒருவன்."
"அந்தப் பொல்லாதவன் யார்?"
"அர்ஜுனன் தான்"
"அப்படியா? என் வேலை எளிதாய் முடிந்தது."
"உன் வேலையா?"
"தேவி"
"சொல்"
"உங்கள் விழிகளும் உதடுகளும் அர்ஜுனன் மீதுள்ள உங்கள் மோகத்தை வெளிப்படையாக அறிவிக்கின்றன"
" நீ என் தோழன் தானே! ஏன் மறைக்கவேண்டும்?"
" நான் தேவேந்திரனிடம் என்ன தெரிவிக்கவேண்டும்?"
"அவர் கட்டளையை ஏற்றுக்கொண்டேன் என்று மட்டும் சொல்."
"உத்தரவு"
"னமே மனமே நீ ஏன் அடங்க மறுக்கிறாய்?"
"ஊர்வசி, உனக்குள் பெருகியிருக்கும் காமப்பெருஞ்சுழல் என்னை அடங்காதே .அடங்காதே  என்று திமிறி எழவைக்கிறது."
"உனக்கு வெட்கமாக இல்லை? பெண் என்ற நாணமும் அடக்கமும் எங்கே போயிற்று?"
"காமக்கலக்கம் ஆண் பெண் பேதம் பார்க்காது. கரையை நோக்கிச் சீறிப்பாயும் பேரலை போல் எப்போது எப்போது என்று தவிதவிக்கும்"
"நீ பார்க்காத ஆண்களா ? நீ ஆடாத சபையா? தேவாதி தேவர்கள் எல்லாம் உன் பாதத்தை முத்தமிடத் துடிக்கிறார்களே! என்ன கண்டாய் இந்த அர்ஜுனனிடம்?"
"நான் இழந்துவிட்ட என்னையே கண்டேன்!"
"இந்தப்பூரிப்பில் நீ உன்னை என்ன அற்புதமாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்! இந்த அலங்காரத்தில் தேவர்களும் மூவர்களும் உன்னிடம் காதல் பிச்சை கோரி நிற்பார்கள்"
"ஆனால் அர்ஜுனன்?"
"வாருங்கள்..வாருங்கள்! இந்த இரவு நேரத்தில் ஏன் என்னைத்தேடி வந்திருக்கிறீர்கள்? இந்த ஆசனத்தில் அமருங்கள்!"
"நான் அமர வரவில்லை அர்ஜுன மணாளா! சயனிக்க வந்திருக்கிறேன்"
"உறங்க விரும்புகிறீர்களா? இதோ எனது சயன மஞ்சம்.நிம்மதியாகப் படுத்து உறங்குங்கள் . நான் உங்களை எவரும் தொல்லை செய்யா வண்ணம் வெளியே காவலிருக்கிறேன்"
"நான் சொன்ன பொருளைப் புரிந்துகொள்ளாத அளவு நீயும் முட்டாளில்லை. உன் பாசாங்குப்பேச்சைப் புரிந்துகொள்ளாத அளவு  நானும் முட்டாளில்லை. உனக்குள் இன்பரசம் ஊற்றெடுக்க நான் நாட்டியம் ஆடவேண்டுமா?"
"அவையில் கண்டேனே. அது போதும்."
"எனக்குப் போதாது. அதுதான் சித்திரசேனன் உனக்கு நாட்டியம் கற்பித்திருக்கிறானே. வா நீயும் நானும் சேர்ந்து ஆடுவோம்.நான் ஆடி ஆடி உன் மார்பில் சாய்ந்து பின் இருவரும் ஒன்றாய் மஞ்சத்தில் சாய்வோம் .இரவு விடைபெறும் வரை காமதேவன் பிடியில் கட்டுண்டிருப்போம்"
"மன்னிக்கவும்.தங்கள் பேச்சு உங்கள் மீதிருக்கும் என் மதிப்பைக் குறைத்துக் குப்பையில் தள்ளுகிறது"
"எனக்கு மதிப்பு வேண்டாம்.உன் அணைப்பு தான் வேண்டும்.அப்போது தான் எனக்குள் எரியும் தீ தணியும்!"
"ஐயோ..இதைக்கேட்க என் காதுகள் கூசுகின்றன."
"என் நடனத்தையும் என்னையும் உற்று உற்றுப் பார்த்தாயே அப்போது ஏன் உன் கண்கள் கூசவில்லை?"
"அம்மணி, நீங்கள் என் முன்னோரின் மனைவி.தங்களுக்கும் ஒரு பிறவியில்  மன்னர் புரூரவருக்கும் பிறந்த மகனின் வம்சத்தைச் சார்ந்தவன் நான்ஆதலால் என் அன்னை குந்தி தேவி அவர்களைப்போல் இந்திராணி ஸச்சி  என அன்னையர் ஸ்தானத்தில்  இருப்பவர்கள். நீங்கள் நடனம் ஆடும்போது அவர்களில் நீங்கள் யார் யார் என்று தேடினேன்."
"உன் தேடல் என்ற தூண்டிலில் நான் மீனாய்ச்சிக்கிக் கொண்டேன். சிக்கிய மீன் துடிக்கிறது. அதைத்தின்று அதற்கு விடுதலை தா.தேவலோகத்தில் தாய் மகன் என்ற பந்தவிதிகள் கிடையாது. தன் மீது காமுற்றவளை ஒருவன் அனுபவித்தாகவேண்டும் "
"மன்னியுங்கள் அன்னையே! நான் மனிதன். தேவனல்ல ..தாயையே புணரும்  மிருகமுமல்ல.தங்கள் அழகில் பிரம்மாவின் கைவண்ணம் காட்டும் ஒரு தெய்வீகத்தைக் காண்கிறேன்.கையெடுத்து வணங்குகிறேன்." "
"அர்ஜுனா அர்ஜுனா நீ மூட்டிய தீயை என்னைத்தழுவி அணைத்து அணைத்துவிட்டு ப்பிறகு வணங்கு.வழிபாடு செய்"
"போய் வாருங்கள் தாயே!"
" அடே முட்டாளே! அப்சரஸ்களில் நிகரற்றவள் எனப்பெயர்பெற்ற நான் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உன் ஆண்மையின் மீது காமம் கொண்டு வலிய
 ஒரு பெண்ணாய்த்தேடிவந்தேன். இன்னும் தாமதிக்காதே..வா..!"
"என் முடிவை நான் மாற்றுவதற்கில்லை அன்னையே!'
"சீ , கேடுகெட்டவனே, பெண்ணைப் புரிந்துகொண்டு அவள் பெண்மையை மதிக்கத்தெரியாத பேடியே! உன் ஆண்மை உன்னை விட்டு நீங்கட்டும்.நீ பேடியாகு ..இனி உன் ஆண்மை யாருக்கும் உதவாது, நீ ஒரு பேடி"
"ர்ஜுனா..என் பிழைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். நீ ஊர்வசியைப்பார்த்த பார்வை,காமப்பார்வை என்று தவறாகக் கணக்கிட்டுவிட்டேன். .வருத்தப்படாதே . எதிலும் தெய்வசித்தம் விளையாடும் .உன்னிடமும் என் மூலமாக அது விளையாடி இருக்கிறது. ஊர்வசியின் சாபத்திற்கு நான் ஒரு சிறு விமோசனம் தருகிறேன். நீ ஒரு வருஷத்திற்கு மட்டும் பேடியாக  வாழ்ந்தால் போதும்.அது எப்போது என்று நீயே தீர்மானித்துக்கொள்ளலாம். இதோ நான் உனக்கு வழங்க விரும்பும் அஸ்திரங்கள்.ஏற்றுக்கொள்." அந்த சாபம் அர்ஜுனனுக்கு வரமாயிற்று  விராட தேசத்தில் யாருக்கும் தெரியாமல்  பாண்டவர்கள் அஞ்ஞாத வாச காலத்தில்  அர்ஜுனன்  ப்ருஹன்னளை என்ற பெயரில் விராட ராஜகுமாரிக்கு  நாட்டியம் கற்றுக் கொடுக்கும் பணியில்  அர்ஜுனன் ஒரு பேடியாகி ஒரு வருட காலம் இருந்தான். ப்ருஹன்னளை உண்மையிலேயே ஒரு பேடிதானா என்பதில் சந்தேகமுற்ற விராட மன்னன்அதனைச் சோதித்தும் பார்த்தான். தோல்வி தான்.அந்தத் தோல்வியில் ஒரு வெற்றியை அனுபவித்து அர்ஜுனன் புன்னகை செய்துகொண்டான்.மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடிற்று.
வென்றது யார்? ஊர்வசியா? தானா?காதுக்குக் கேட்கும்படி ஒரு சிரிப்பொலி.கிருஷ்ணனின் மாயச்சிரிப்பொலி.
 "கிருஷ்ணா...நீயா?"
"ஆம். ஊர்வசியின் மயக்கமும், உன் தெளிவும், இன்று பிருஹன்னளையாகி நீ ஊர்வசியை வென்றுவிட்டதாக நினைக்கும் உன் கர்வமும் எல்லாமே நான் தான் அர்ஜுனா!