Saturday, 16 February 2013

வேரோட்டம்


வேரோட்டம் 
சிலர் ஊர் எல்லைப் பிள்ளையார்  கோயிலோடு நின்று கொண்டார்கள். சிலர் பஸ் ஸ்டாண்டிலே  நின்று கொண்டார்கள். சிலர் தான் பதினோரு கி.மீ, கடந்து  ரயில் நிலையத்திற்கு வந்தவர்கள்.
ஒருவர் குமரவேல் ஆசாரி. அவர்தான் தாளக்கட்டை போடுகிறவர். ஆள் குள்ளம் கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு திருட்டு முழி. அடுத்து மொட்டையப்ப கவுண்டர். எப்பவோ ஒரு கச்சேரியில் பாலக்காடு மணி ஐயர் வாசிப்பைப் பார்த்து விட்டுத் தன்னை ஓர்ஏகலைவனாகப் பாவித்துக் கொண்டு தலையை உருட்டு உருட்டென்று உருட்டுகின்ற ஆசாமி. அவர்தான் மிருதங்கம். தடவித் தடவி ஆன மொட்டை போல சதா ஒரு தலை தடவல்.
அடுத்து ஒரு பஜனை தவறாமல் விளக்குத்தண்டைப் பிடித்துத் திரிந்த பூபாலன். அரை நிஜார் போட்ட காலத்தில் அவன் தண்டைப் பிடித்தான்.  அடுத்த ஆனியிலோ ஆவணியிலோ அவனுக்கும் கால் கட்டு விழுந்து விடும். பெண் பார்க்கிறார்கள்.இனிமேலும் மார்கழி பஜனையில் விளக்குத் தண்டு தூக்கும் பொறுப்பிற்கு வருகிறவள் அனுமதி வேண்டும்.
ஆள் நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டான். பதினெட்டாம் போருக்கு நடுகிற அர்ஜுனன் தவசு மரம் மாதிரி. இருந்தாலும் அதே பவ்யம். விளக்குத் தண்டு தூக்குவது அவன் பட்டா பாத்தியம் போல் அதே ஈடுபாடு. ஆணிக் குத்து மாதிரி ஊன்றிப் பார்த்து உட்கிரகிக்கிற அதே ஊமைப்பார்வை.
சமயத்தில் “தடிமாடு மாதிரி முழிக்கிறியே! பிள்ளைவாள் வீட்டிலே வௌக்குக்கு ஊத்த  எண்ணெய்ச் சொம்போட நிக்கிறாங்க! முண்டமே, தண்டு தூக்கினா மட்டும் போறுமா?” என்று இரைந்தாலும் சிவுக் கென்று தூக்கம் கலைந்த மாதிரி நாதமுனி நாயுடுவின் கீர்த்தனைக் கிறக்கத்திலிருந்து விடுபட்டு த தலை உதறும் விழிப்புணர்வு  அதே பணிவு.
இவர்களெல்லாம் வரவேண்டியவர்கள், ஒரே கோஷ்டி. வந்திருக்கிறார்கள். ஆனால் விடிவெள்ளி வில்லாளன் வரவேண்டிய ஆளல்ல. அந்தக் காலத்தில் நாஸ்திகர். அப்புறம் கழகம் உடைந்து கட்சி கட்சியாகப் பிளக்கிற சமயத்தில் டக்கென்றுதிக்குத் திசை தெரியாமல்  ஓரிடத்தில் நின்று விட்டவர்.
 பஜனை என்றால் பூசணிக்காயைப் போட்டு உடைப்பவர்  போல அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு, உண்டு இல்லையென்று வேரறுக்க வந்துவிடுவார்.
அவரும் வந்திருந்தார்.
மார்கழியிலும் சரி, குரு பூஜை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜயந்தி என்று
பண்டிகையிலும் சரி. பஜனை கோஷ்டி அவர் வீட்டு முற்றத்தைத் தாண்டி, வீடு திரும்புகிற வரை தலையைச் சுவருக்கு முட்டுக் கொடுத்து சாய்மானத் திண்ணைத் திண்டில் முதுகு சாய்த்துப் போட்ட காலை அகற்றாமல் மார் மேல் கட்டிய கையை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர். அவர் கூட வந்திருந்தார்.
இன்னும் எவ்வளவோ பேருக்கு ஸ்டேஷன் வரை வரப் பிரியமுண்டு. நாதமுனி நாயுடுவுக்கும் தெரியும். போக வர பஸ் செலவு. அரைநாள் வேலை கெடல். இப்படி அசௌகர்யங்கள். புரிந்தது.
விடிவெள்ளி கிராமத்தில் வேலைக்கா பஞ்சம்? அருகில் உள்ள மலைக்காடு விறகு வெட்ட  வா, வா என்று கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது.
வயலும் வரப்பும், மாடும் கன்றும், திரிக்கிற கயிறும் உரிக்கிற நாரும். யோசித்தால் சோம்பிச் சுகம் காண்பது  போல் தோன்றும் கிராமம், கைராட்டையில் ஓயாமல் நூல் ஓடுகிற மாதிரி சன்ன இழையாக இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
ஹைதராபாத்தில் இதெல்லாம் இருக்கப் போவதில்லை டோங்கா வண்டி, கார், பஸ் என்று கண் மண் தெரியாத வேகம். இரைச்சல், யந்திர மமகாரம், நாகரித்தின் வேஷ மாற்றம், மனசு தெரியாது,தெரிவிக்காது  முகமூடி அணிந்த மனிதர்கள்.
யார் கண்டது?
அங்கும் மனிதர்கள் இருக்கலாம். போகப் போகத் தெரியும்.
“என்னா நாயுடு! ஊரை விட்டுட்டுப் போறமேன்னு துக்கமா இருக்கும்.”
குமரவேல் ஆசாரி, “இருக்காதா பின்னே! பொறந்து வளர்ந்த ஊரு” என்று இடை வெட்டினார்.
மொட்டையப்ப கவுண்டர் தலையைத் தடவிக் கொண்டே, “அந்திம காலத்தை நாயுடு மாமா இங்கேயே கழிச்சுடணும்னு தான் பிரியப்பட்டாரு” என்று சுருதி போட்டார்.
பூபாலன் கையில் இப்போதும் விளக்குத் தண்டு இருப்பவன் போல் பேசாமல் இருந்தான்.
நாதமுனி நாயுடுவுக்கு ஆட்காட்டி விரலில் முதல் மடக்கு நீளத்துக்கு நரைத்த தாடி தலை வெளுத்து மாமாங்கம் ஆகிவிட்டது. இமை விளிம்பைத் தொடாத விழிப்பாவை. தணதணவென்று எப்பவும் அக்கினி இருக்கிற மாதிரி ஒரு சிம்மப் பார்வை. ஒரு சமயம் பண்டாரம் மாதிரி, ஒரு சமயம் ரிஷி மாதிரி ஒரு முகத்தோற்றம்.
இவர்களுக்கு என்ன சொல்வது?
மலைப்பாதையில் கிணுகிணுக்கும் மாட்டு மணியோசை... நாடு காத்தான் மலைப்பாறையில் துயிலும் சூரியன் பார்க்காத சுனை, சேணியம்பாடி மேட்டிலிருந்து வண்டி இறங்கும் போது அந்த பள்ளத்தில் தானாகக் கொப்புளிக்கும் தெம்மாங்கு...
என்னென்ன நஷ்டங்கள்... என்னென்ன பறிமுதல்கள்...
‘ம்ஹூம்... இதுதான் கால ஓட்டம்!”
நாதமுனி நாயுடு சிரித்தார். புகையிலை படாத, வெற்றிலைக் கறை படாத வயோதிகப் பற்கள் இன்னும் வெண்மை மாறவில்லை.
“நாம் என்ன பண்றது வில்லாளன்! பிராப்தம் அவ்வளவுதான். ருணம் தீர்ந்தா பந்தம் பட்டுணு விட்டுடும்! ஒங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லே.”
வில்லாளன் தொண்டையைச் செருமிக் கொண்டார். “என் நம்பிக்கைக்கு என்ன நாயுடு அவசியம்?”
“நல்லாச் சொன்னீங்க!” என்று மொட்டையப்பன் தலையை உருட்டினார்.
“நாயுடு மாமா நெலத்தை வித்தது என்னமோ சரி! வீடு வித்திருக்கக் கூடாது.”
“நான் என்னா பண்ணட்டும்! பசங்க ஆட்சி வந்தாச்சு. ப்ளாட் மட்டும் எழுபத்தையாயிரம்னான் பெரியவன், சின்னவன் மொஸைக் இல்லாம எப்படி வீடு கட்டுவேன்னான்! ரெண்டும் ஜீரணமானா தான் அங்கே வீடு எழும்பும்” என்று வேதாந்தி போல வலக்கை விரித்துத் தாடியைச் சொறிந்தார்.
“சாமான்லாம் லாரியிலே போயாச்சா?” என்று விசாரித்தார் வில்லாளன்.
“ஒரு வாரமாச்சு! புதனோட புதன் எட்டாவது நாள். கௌம்பணும் கௌம்பணும்னு பார்க்கிறேன். எட்டு நாளா ஊர் முழுக்க விருந்து. நான் யாருக்குப் போடப் போறேன்? மண்டையைப் போட்டா தந்தி வர ஒருநாள். இங்கேயிருந்து அவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு யார் வரப்போறாங்க?”
நாயுடு குரலில் துக்கமில்லை. வெறும் விவகாரம் பேசுகிற தொனி. பேச்சு பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தாலும் மனசு எங்கோ!
ராஜ வீதி திரும்பி ஒரு நிலைக்குத்து. மெல்ல பஜனைக் கோவிலருகில் ஒரு நிறுத்தம். கையில் ஹார்மோனியம். பின்னங்கழுத்தில் வார்ப்பட்டை உறுத்தாமல் பாந்தமாக உட்கார்ந்து தொங்க, விரல்கள் அதன் மேல் இழைகின்றன.
மொட்டையப்பன் தலை உருண்டு உருண்டு மிருதங்கம் ஜமாய்க்கிறது. சுருதிக் கணக்கின்படி தாளக் கட்டையைக் குமரவேல் ஆசாரி போட்டுக் கொண்டு நிற்க, பூபாலன் நிஷ்காம்யமாக விளக்குத் தண்டைத் தாங்கிக் கொண்டு வீடு வீடாக எண்ணெய் வசூலிக்கிறான். எண்ணெய்க் குளத்தில் சில்லறைக் காசுகள் தெறித்துக் கொண்டு விழுகின்றன.
“தெறிக்கிற மாதிரி போடக் கூடாது. மொள்ளமா எண்ணெய்க்குள்ள நழுவுற மாதிரி தான் காசு போடணும்!” கோடி வீட்டு மங்கம்மாப் பாட்டி பேரனுக்குச் சொல்லித் தருகிறாள்.
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்”
நாதமுனி நாயுடு கண்ணை மூடிக்கொண்டு நாதப் பிரம்மத்தில் மூழ்குகிறார்.
அடியாழம் தெரியாமல், மிதந்து நீந்த மனசு வராமல் சரசரவென்று பாதாளம் தொடுகிற நிர்ச்சிந்தையான முழுக்கு.
வீடுகளில் கைவேலையைப் போட்டுவிட்டு வெளியே பெண்கள் நிற்கிறார்கள்... ஆண்கள் நிற்கிறார்கள். வயலுக்கு ஓட்டிச் செல்லப்படும் மாடு நிற்கிறது. மேய்க்கப் புறப்பட்ட ஆட்டுமந்தை நிற்கிறது. சுற்றுகிற பம்பரங்கள் நிற்கின்றன. உருளுகின்ற கோலிகள் நிற்கின்றன.
பாதாளம் தொட்டுவிட்டு நாயுடு மேல் எழுகிறார். ஆகாச கங்கைதான் இலக்கு மாதிரி ஸ்தாயி கூடுகிறது. மோர்க்காரி தலை மீது மொந்தையுடன் இடுப்பில் கை வைத்து நிற்கிறாள்.
“நாயுடு போன பெறவியிலே தேனாபிஷேகம் பண்ணியிருப்பார்!”
“அட, வண்டி ஓட்டிக்கினு இருந்த நாயுடுப்பா இவுரு. சேணியம்பாடி ரோட்லே இவர் பாடின தெம்மாங்கைக் கேக்கணுமே!”
“நாப்பது வருஷமா விடாம பஜனை பாடிட்டு வர்றாரு. அதான் பகவான் அவரை நல்ல நெலமைலே வெச்சிருக்கான்.”
மனசு வெள்ளாள வீதியிலிருந்து செங்குந்தர் வீதிக்குத் திரும்புகிறது.
இரண்டு பக்கமும் பாவு கட்டிய இடைவெளி வழியில் கோஷ்டி நடக்கிறது. ஓடுகின்ற தறி ஒலிகள் நிற்கின்றன. சுழலுகின்ற ராட்டினக் கடகடப்பு நிசப்தமாகிறது.
“புழுவாய்ப் பிறக்கினும்
புண்ணியா நின்னடி”
ராக சஞ்சாரத்தில் நேற்று தொட்ட வான உயரத்தை இன்று மிஞ்சிய பரவசக் களிப்பில் மூடிய கண்களிலிருந்து ஆனந்தம் முத்து முத்தாய் உதிர்கிறது.
எத்தனை நடை! எத்தனை பயணம்! எத்தனை மார்கழி! எத்தனை நிம்மதி!
தொண்டை கட்டவில்லை. இப்போது ரயில்வே ஸ்டேஷனில் ஹார்மோனியத்தைக் கையில் கொண்டு வந்து கொடுத்தாலும் கணீரென்று ஆலய மணி நாதம் போல் பாட்டு பிறந்து விடும்.
“இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரி... நமக்கு நாமே என்னவோ ஆயிடறதா கண்ணை மூடிக் கற்பனை பண்ணி மனசை எங்கியோ அடமானம் வெச்சுடற கதை நாயுடு!” - இப்படி ஒரு சமயம் இதே வில்லாளன்.
“மனசு ஒரு பாரம்தானே வில்லாளன்! அதை எங்கியோ கொண்டு போய் எறக்கிட வேண்டியிருக்கு. ஏதாவது ஒரு சுமை தாங்கியிலே.”
அப்புறம் ஒரு விவாதம். முடிவேயில்லாத விவாதம், வில்லாளன் விட்டுக் கொடுத்த சரித்திரம் இல்லாத விவாதம் - கடைசியில் மௌனம் கண்டெடுக்கும் மகத்தான நிம்மதி.
எல்லாவற்றுக்கும் காலையில் கோயில் மூலையில் மூட்டை முடிச்சு போட்டாயிற்று. இனி ஹைதராபாத். அங்கே யாருக்கு வேண்டியிருக்கப் போகிறது இதெல்லாம்!
வேண்டப்பட்டவனுக்குக் கூட அதிகம் வேண்டியிருக்காது. ஒரு பிடி அவல் மாதிரி. ஏதோ கொறித்தோமா, விட்டோமா என்று ஓடுகிற ரயிலைப் பிடிக்க உட்கார்ந்திருக்கிற அவசரத்தில் ஒரு காதில் கொஞ்சம் போட்டுக் கொண்டு ஒரு கண்ணை அங்கே இங்கே மேய விட்டுக் கொண்டு.
நாயுடுவுக்குத் தூக்கம் வரவில்லை. அதுவெல்லாம் வரக்கூடிய வயது போய் விட்டது. ஆனால் ஓர் உறுத்தல் இருந்தது. வளை வளையாகத் தோண்டிக் கொண்டு ஒரு பெருச்சாளி மண்ணை வெளியே வெளியே தள்ளி விடுகிற மாதிரி இன்னும் உளைச்சல் பூர்த்தியாகாத மாதிரி ஓர் உறுத்தல்.
மொட்டையப்பனும் குமரவேலும் எழுந்து ஸ்டேஷன் பிளாட்பாரக் கடையில் வாழைப்பழமும் பிஸ்கெட்டும் வாங்கி வரக் கிளம்பினார்கள்.
“அதெல்லாம் வேண்டாம்யா!”
“வழியிலே சாப்பிடுவீங்க நாயுடு! நீங்க போய் வாங்கியாங்க!” என்ற அவர்களை வில்லாளன் விரட்டினார் அவர்கள் நகர்ந்தனர்.
விளக்குத் தண்டு பூபாலன், நாயுடு அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சிலிருந்து தள்ளி இரண்டடி மரியாதை விட்டுக் கீழே உட்கார்ந்திருந்தான்.
“என்ன முகம் வாட்டமாயிருக்கு நாயுடு?”
“ஒங்களுக்குச் சொல்லி என்ன புண்ணியம்?”
“நான் நாஸ்திகன் என்பீங்க. பரவால்லே. சொல்லுங்க.”
“ஒங்களுக்கு ஏன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத் தோணுச்சி வில்லாளன்?”
வில்லாளன் சிரித்துவிட்டார். “இதென்ன கேள்வி?”
“கேள்வி கேள்விதான். பதில் சொல்லுங்க.”
“இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க! மொதல்லே இப்படிக் கேக்கவே கூடாதுங்க.”
“சரி கேட்கக் கூடாது கேட்டுட்டேன். ஏன் வந்தீங்க? ஒரு பாசமா?”
“இல்லே.”
“ஒரு பிரியம்... அதானே!”
“அப்படி இல்லே கணக்கு! பிரியம் இருக்கறவங்க, என்னைவிட ஜாஸ்தியா ஒங்கமேல் பிரியம் வெச்சிருக்கிறவங்க எத்தனையோ பேர் உண்டே!”
“மடக்கிட்டீங்க! சரி... பின்னே?”
“அதானே சொல்லிட்டேனே?”
“கேக்க வாணாங்கறீங்களா?”
வில்லாளன் மசிந்துவிட்டார்.
“அடாடாடா... நீங்களும் விட மாட்டீங்க நாயுடு! நம்ப ஊர்லே ஒங்களுக்கு அப்புறம் இனிமே பாட்டுப் பாட யார் ஆளு?”
நாயுடுவின் அந்தரங்கத்தின் மீது அடி விழுந்தது. பலமான அடி, உறுத்தல் உளைச்சல், மீது விழுந்த அடி.
“என்னமோ பொளுது மொளைச்சா பொளுது போனா லவுட்-ஸ்பீக்கரை வெச்சு நாலா பக்கமும் ஊளையிடறாணுங்க. ஒரே சினிமாப் பாட்டு, அங்கே வாரியா இங்கே வாரியான்னு சில்லறைப் பாட்டு. அசல் பாட்டு... மனுஷன் மனசை அசத்துற பாட்டு பாட இனிமே ஆளு யாரு நாயுடு? என்னமோ அதை நெனச்சுட்டிருந்தேன். மனசு தாங்கலே.”
நாயுடு கண்களை மூடிக் கொண்டார்.
இதுதான்... இதுதான்... வம்சக் கொடி அறுந்த மாதிரி, தூக்கிய கொடியை வாங்கப் பின்னால் ஆளற்றுப் போன மாதிரி அந்த உறுத்தலுக்கு வடிவம் இதுதான். இதுவேதான்.
“வில்லாளன்! நீங்க நாஸ்திகனாக முடியாது!” என்றார் நாயுடு கண் திறந்து.
“ஆகாட்டா போறேன்! அது ஒங்க அபிப்பிராயம் தானே!”
நாயுடுவின் பார்வை விளக்குத் தண்டு பூபாலன் மேல் விழுந்தது.
“ஏண்டா பூபாலா... மாமா சொல்றதைக் கேட்டியா?”
“கேட்டுட்டுத்தானுங்க இருக்கேன்.”
“தடி மாடு மாதிரி தண்டு தூக்கிட்டுத் திரிஞ்சியே... எத்தினி பாட்டு பாடியிருப்பேன்? எதா... ஒரு பாட்டுப் பாடு.”
அவன் வெட்கத்தோடு சிரித்துவிட்டு அந்தத் திட்டு கூட ஓர் ஆசீர்வாதம் போல் தலைகுனிந்தான்.
“பாடுடான்னா... கல்யாணப் பொண்ணாட்டம் தலை குனியறியே! வர்ற ஆனியிலே மணைமேல ஒருத்தி வந்து உட்காருவா... அவ பக்கத்திலேயும் தலையைக் குனிஞ்சுக்காதே!”
“போங்க நாயக்கரே!” அவன் இன்னும் நாணினான்.
“நாயுடு பாடச் சொல்றார்லே... பாடேண்டா!”
“ஐயய்ய... இங்கியாங்க! ரயில்வே ஸ்டேஷனு.”
“இவரு பெரிய சங்கீத வித்வான்! மேடை போட்டுப் பாடச் சொல்வாங்க. பாடுடா சோம்பேறி.”
டமாரென்று பாட ஆரம்பித்து விட்டான் பூபாலன்.
“தில்லை அம்பல நடராஜா.”
பிடரியில் அறைந்தது போல் நிமிர்ந்து உட்கார்ந்தார் நாயுடு. ஒரு பாட்டு முடிந்தது.
“பச்சை மாமலை போல் மேனி பாடுடா!”
வாழைப்பழம், பிஸ்கெட் வாங்கிக் கொண்டு மொட்டையப்பனும், குமரவேல் ஆசாரியும் திரும்பி விட்டனர்.
“கேளுங்க ஐயா... நம்ப பூபாலன் பாடறான். எங்கேடா கத்துக்கிட்டே... ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு!”
நாயுடுவின் அதே ராக சஞ்சாரம். அதே ஸ்தாயி. அதே ஆரோகண அவரோகணம். அதே முழுக்கு. அதே பாய்ச்சல். அதே பறப்பு.
“அடேய்... அடேய்...அடேய்...”
நாயுடு மூன்று பாட்டு முடிந்ததும் எழுந்து போய் அவனை மார்போடு கட்டிக் கொண்டார். அதுதான் அவரால் முடிந்த பாராட்டு.
“வில்லாளன்! உம்ம கொறை நீங்கிப் போச்சா?” என்ற மார்பிலிருந்து பாறாங்கல் அகன்ற மாதிரி ஒரு பூரிப்போடு கண்களில் ஆனந்தம் முத்து முத்தாய்க் கொப்புளிக்கக் கேட்டார். உறுத்தல் ஓய்ந்து உபாதை நீங்கிய ஆசுவாசம்.
கணகணவென்று ஸ்டேஷனில் ரயில் வருவதற்கான மணியோசை கேட்டது. அது ஹைதராபாத் போகும் வண்டிதான்.

Wednesday, 6 February 2013

என்ன விடுதலை அது!


என்ன விடுதலை அது!
பத்தே காலுக்குத்தான் அட்சதை தருவார்கள். முகூர்த்தம் ஒன்பது பத்தரை. இருந்தாலும் மித்ரா வீட்டார் மகா சாங்கியக்காரர்கள். ஒரு சடங்கு விட்டு வைக்கவோ அவசரப்படவோ மாட்டார்கள்.
கடைசி கால் மணி நேரத்தில் தான் மாங்கல்ய தாரணம் நடக்கும். மூன்றாம் வருஷம் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணத்தல் போய் உட்கார்ந்து, இப்படி லேட் ஆகி ஆபீசுக்குப் பதினொன்றுக்கோ அதிகமாகவோ போன ஞாபகம்.
கல்யாணி உட்கார்ந்திருந்த ஆட்டோ, டிரைவர் விநாயகம் வீட்டெதிரில் நின்றிருந்தது.
“ஒரு டூ மினிட்ஸ் மேடம்! ஊர்லருந்து தங்கச்சி வந்திருக்கான்னு பையன் வந்து சொல்லிட்டுப் போனான். தலைய காட்டிட்டு வந்துட்றேன்.”
அவள் அனுமதி பெற்றுத்தான் வீட்டிற்குள் போயிருந்தான். அது அலுவலகம் போகிற வழி. இரண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமாகப் போகிறது. டிரைவர் விநாயகம் வரவில்லை.
வரட்டும். பத்து நிமிஷமானாலும் பரவாயில்லை. அவனைக் கடிந்து கொள்ள முடியாது. மாமூல் ஆட்டோ என்பதற்கு மட்டுமல்ல.
மித்ராவின் கல்யாணத்திற்கு அவள் போகப் போவதில்லை. நேராக ஆபீஸுக்குப் போகிறாள். அது அவனுக்குத் தெரியும்.
பாவம் மித்ரா! ரொம்ப எதிர்பார்ப்பாள். தன்னை விட நாலு வயது இளையவள். இருபத்து நாலிலேயே அவளுக்குத் தாலி பாக்கியம் லபித்து விட்டது.
கல்யாணி கசப்போடு சிரித்துக் கொண்டாள். இந்தப் பெண்கள் ரேஷன் கியூவில் மண்ணெண்ணெயோ பாமாயிலோ கிடைத்து விட வேண்டும் என்று பறப்பது போல் இந்தக் கல்யாணத்துக்கு என்ன பரபரக்கிறார்கள்.
இத்தனைக்கும் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணம் ஒரு தோல்வி.
கியூவில் மண்ணெண்ணெய் கிடைக்காமற் போனவர்களின் மன இடிவு தனக்கு வந்துவிடக்கூடாது என்று என்ன அலை அலைந்தாள் - மித்ரா.
கல்யாணத்திற்குக் கட்டாயம் போக வேண்டும். போவாள் என்றுதான் விநா - டிரைவர் விநாயகத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் - எதிர்பார்த்தான். அவள் உயிர்ச் சிநேகிதி என்று விநாவுக்குத் தெரியும்.
ஆட்டோ ஸ்டாண்ட் கல்யாணி வசிக்கிற தெரு முனையில் அவன் ஆட்டோ கொண்டு வந்து நிறுத்தி நாலு வருஷமாகப் போகிறது. அவள் பஸ் சவாரி நிறுத்தி ஆட்டோ ஏறத் தொடங்கி மூன்று வருஷம்.
அவள் குடும்பமே அவனுக்குத் தெரியும். ரிடையராகிப் பென்ஷன் பேப்பர் எங்கோ சிக்கிவிட அதற்கு மல்லாடிக் கொண்டிருக்கும் அப்பா, எப்போதும் வாழ்க்கையைச் சபிக்கிற அம்மா, நாலுபேர் போல சுரிதார் அணிய முடியாமல் சலிக்கிற ப்ளஸ்டூ படிக்கிற தங்கை, பி.எஸ்ஸி. படிக்கும் தம்பி.
எல்லாம் தெரியும்.
அவளது ரிசப்ஷனிஸ்ட் உத்தியோகத்தில், ஒற்றைச் சம்பளத்தில், குடும்பச் சக்கரம் முக்கல் முனகல்களோடு சுற்றுவதும் தெரியும்.
பல கல்யாணங்களுக்கு அவன் ஆட்டோவிலேயே போய் கல்யாணி தலைகாட்டி அட்சதை தூவி மொய் எழுதி வந்திருக்கிறாள்.
அவன் சாட்சி.
அவர்கள் எல்லாம் அவ்வளவு நெருக்கமில்லை. இந்தக் கல்யாணம் அப்படியல்ல. மித்ரா மிக மிக நெருக்கம். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் அது.
கல்யாணத்திற்குப் போய் நின்றவுடனே ஒப்பீடு தொடங்கிவிடும்.
தான் இருபத்தெட்டில் வெறுங் கழுத்தோடு நிற்க, இருபத்து நாலில் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுவதை, மௌனமாகவோ வாய்விட்டோ அலசுகிற கூட்டம் எல்லாக் கல்யாண மண்டபங்களைப் போல் அங்கும் இருக்கும். அதற்கே போக விரும்பவில்லை.
வரவர இந்த உணர்வு ரொம்பத்தான் உறுத்துகிறது. தனக்குக் கல்யாணம் ஆகாதது தன் குற்றம் என்கிற மாதிரி.
ஏதோ பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருத்தியின் இறுதி லட்சியமே அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகிவிட வேண்டும் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட பிரமை.
வேளை வர வேண்டும் என்று வாய்ப் பசப்பலாகப் பேசுகிறவர்களுக்குக் கூட வரத் தாமதிக்கும் அந்த வேளைத் தவறுதலுக்கு, தன் துரதிருஷ்டமே காரணம் என்ற உள்ளெண்ணம்.
விநா மட்டும்தான் அவளை நன்கு புரிந்து கொண்டான். அவன் தன்னை விட மூத்தவன். முப்பத்திண்டு. தன் மாதிரியே குடும்பச் சூழ்நிலை. தன் மாதிரியே, தப்பித்துக் கொண்டு, தன்னலம் தன் சுகம் தேடாமல் குடும்ப வண்டியில் சக்கரம் தள்ளுபவன்.
எத்தனை வகையான ஆண்கள். அலுவலகம், வெளியுலகம். அடடா எத்தனை வழிசல்கள்! எத்தனை பேடி விண்ணப்பங்கள்! எவ்வளவு ஊமைக் காமங்கள்!
இருபத்தெட்டு வரை கட்டு விடாமல், முகப் பொலிவு மங்காமல், ஒரு கல்யாணமாகாத பெண் தென்பட்டால் மனுஷ புத்தி என்னமாய் வக்கரிக்கிறது!
விநாவும் அவளை ஏற்றிச் சென்ற முதல் சவாரியில் இப்படிச் சிறிது அசடு வழிந்திருப்பானோ!
சீச்சீ... அவன் ஜென்டில்மேன்.
ஜென்டில்மேனானால் என்ன? முதலில் ‘மேன்’ ஆண். கல்யாணமாகாதவன்.
நான் பெண். கல்யாணமாகாதவள். அவனுக்கு அப்படி ஓர் எண்ணம். இருந்திருக்கலாம். இப்போது இல்லை. அவனுள்ளிருந்த ‘மேன்’ மாறி ஜென்டில்மேனாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
அவன் எதெதற்கு சாட்சியாக இருந்திருக்கிறான்!
மித்ராவின் அக்கா சௌம்யா விவாகரத்திற்கு, தக்க விவேகமான துணையில்லாததால், வக்கீலிடம் கல்யாணி அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.
கணவனை விட்டு ஓடி வந்து பதினெட்டு நாள் புகலிடம் தேடி வந்தாளே பூர்ணிமா. அந்தக் கணவன் வீட்டுக்குக் கல்யாணி சமரசம் செய்ய அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.
ஐந்தாறு வரன்கள் அவளைப் பார்க்க வந்த போதெல்லாம், அவர்கள் திரும்பிப் போக அவன் ஆட்டோவைத்தான் அமர்த்த வேண்டி வந்திருக்கிறது.
விநா ஒரு நபரல்ல.
இன்னும் துடிக்கும் கருணை, பரிவு, கண்ணியம் என்ற மனுஷத் தன்மையின் சிறு துளித் தத்தளிப்பு. ஒருவேளை அதுவும் வற்றிப் போகலாம். போகட்டும் போ.
“கல்யாணி, உன் கல்யாணம் என்னவாயிற்று? எப்போ எங்களுக்கெல்லாம் சாப்பாடு போடப் போறே? நீயா முயற்சி எடுக்கலேன்னா ஒங்க வீட்டிலே யாருக்கும் ஒறைக்கப் போறதில்லே. கல்யாணி, பருவத்தே பயிர் செய்யணும்மா.”
ஆட்டோக்கார விநாயகத்திற்கும் அவளுக்கும் சிநேகமாம் என்ற கசமுசல், டைனிங் டேபிளில் அவளில்லாத போது ஓடி உலவிய பின் எத்தனை ஞானோபதேசங்கள்!
பொறுக்க முடியாமல் ஒருத்தியிடம் கல்யாணி முகத்திலறைந்தாற் போலச் சொல்லி விட்டாள்.
“த பாரு நீலா! நான் கல்யாணம் பண்ணிக்கறதாயில்லை. அந்த ஆட்டோக்காரனை வச்சிண்டிருக்கேன். நோ ட்ரபிள். போறுமா? நீங்கள்லாம் கல்யாணம் பண்ணி, காதல் பண்ணி என்ன கிழிச்சு எந்தக் குப்பை - என்ன குப்பை கொட்டினீங்க?”
“அடியேய், அடியேய்ய்ய்...” என்று நீலாவுக்கு உடல் நடுங்குவது கண்கூடாய்த் தெரிந்தது. அவள் நம்பி விடப் போவதில்லை. இருந்தாலும் தங்கள் ‘டேபிள்வம்பு’ ரகசியம் தெரிந்து கல்யாணி இந்தப் போடு போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு வாரம் அலுவலகத்தில் அவளைச் சுற்றி மயான அமைதி.
கல்யாணிக்கு ஒரு குரூர திருப்தி, தினவெடுத்த நாக்குகளை ஒரு வாங்குவாங்கிய நிறைவு.
என்ன? வாய் கொழுத்தவள் என்று விமர்சனம் நிலவும்! கவலையில்லை.
இப்படிச் சொன்னதை யாரிடமாவது சொல்லிச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. விநாவிடமே சொன்னாள், சிரித்துக் கொண்டே.
அவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.
“என்ன விநா?”
மெல்லிய விசும்பல்.
“விநா... விநா... விநா...”
அவன் வாய்விட்டு ஒரு பெண் மாதிரி அழுதான். என்ன இவன்? இவ்வளவு அசடா! இவனைப் போய் ஜென்டில்மேன் கின்டில்மேன் என்று நினைத்தோமே!
ஒருவேளை நான்தான் வெறுப்பேறி வக்கரித்துப் போனேனோ!
சீ, இதைப் போய் இவனிடம்...
ஆனால் இவன் வெறும் இவன் இல்லையே! நானாய் அப்படி நினைத்தேனா?
இப்படிச் சொல்வது அவன் தப்பாக எடுத்துக் கொள்ளத்தானே தூண்டியது போலிருக்குமென்று நினைக்கத் தவறி விட்டேனா...
சே, இவன் ஏன் அழுகிறான் இதற்கு?
அன்று ஐந்து நிமிடம் கல்யாணி மௌனமாயிருந்தாள். அப்புறம் தொண்டை கனைத்துப் பேசினாள்.
“ரொம்ப ஸாரி விநா.”
“இனிமே நீங்க வேற ஆட்டோவில் போறதா இருந்தாலும் போங்க மேடம்!” கம்மிய தொண்டை.
“பச்! இதான் கோழைத்தனம். அத விடு நீ ஏன் அழுதே?”
இன்று வரை விநா அதற்குப் பதில் சொல்லவில்லை. அவன் பார்வை, அவன் காட்டும் மரியாதை இவற்றில் ஒரு மாற்றம். கூடுதல் பரிவு. கை கூப்பும் கருணை.
“விநா, எனக்கு இது பிடிக்கலப்பா. பீடம் உயர்த்தி நீயும் என்னை ஒரு விலக்கத்தில் வச்சுடாதப்பா.”
கல்யாணி கெஞ்சவில்லை. பார்த்தாள், புரிந்திருக்கும். ஆனால் அவன் அந்த மரியாதையை மாற்றிக் கொள்ளவில்லை.
திடீரென்று ஒரு நாள் ஆட்டோ பயணத்தில் அவள் சிரித்தாள்.
“என்ன மேடம் சிரிக்கிறீங்க?”
“ஒண்ணு ஞாபகம் வந்தது.”
“சரி!” அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
“சொல்லட்டுமா?”
“இஷ்டப்பட்டா சொல்லுங்க.”
“ஆமாம். கேட்டுட்டு நீ பொம்பள மாதிரி அழுவே.”
“இல்லே மேடம்!” விநா தேறியவன் போல் சொன்னான்.
“இந்த வேலைக்கு முன்னாடி நான் பொன்னேரி தாலுக்கா ஆபீஸ்ல, டெம்பரவரியா கிளர்க் வேல பார்த்தேன். தெனம் ரெண்டு முறை ஸ்டேஷன் தரிசனம். அப்ப ஒரு சமயம் ஸ்டேஷன்ல ஒரு கூட்ஸ் என்ன காரணத்தாலோ ரொம்ப நாள் நின்னு போச்சு.
லைன் ஓரமா நடந்து ஸ்டேஷனுக்கு வருவேன். ரெண்டு மாசம். கூட்ஸைப் பாத்தா ஐயோ பாவம்னு இருக்கும். அப்புறம் இது எப்படா கௌம்பிப் போவும்னு எனக்கே ஒரு ‘போரா’ப் போச்சு.”
‘ம்ம், அப்புறம்?”
“ஒருநாள் அது பொறப்பட்டுப் போயிடுச்சு. அப்புறம் ஸ்டேஷன் வெறிச்சோடிப் போச்சு.”
விநா சிரித்தான். ஏன் எதற்குச் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டான். அழுவதை விடச் சிரிப்பது மேலென்று முதிர்ச்சி வந்திருந்தது.
“எங்கேயும் எதுவும் லேட்டாயிடக் கூடாதுன்னு ஏண்டா பதர்றோம்னு அப்ப நெனச்சேன்.”
அது என்றோ ஒருநாள் சொன்னது. வர வர மனசு சலித்து வருகிறது. வெறுப்பு, எதைப் பார்த்தாலும் கடுப்பு. இது நல்லதில்லை என்று தனக்கே கூட உறைக்கிறது.
எதிரில் வந்த ஓர் ஆட்டோ நின்று கல்யாணியின் சிந்தனை கனவு கலைந்தது.
“நிறுத்துப்பா, நிறுத்து!” என்று கட்டளை யிட்டது ஒரு தெரிந்த குரல். சௌம்யா. அடடே, கூட நீலாவும்!
இருவருமே இறங்கி வந்தனர். ஆட்டோவில், தான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வருகிறார்களோ? தங்கை மித்ராவின் கல்யாணத்தை விட்டு விட்டு சௌம்யா எங்கே வந்தாள்?
“ஒன்னைப் பாத்துட்டுத்தான் கல்யாணி எறங்கினேன்!”
“என்ன விஷயம்?”
“கல்யாணத்துக்கு தானே வந்துண்டிருக்கே?”
என்ன சொல்வதென்று தெரியாமல் கல்யாணி மௌனமாய் இருந்தாள்.
“கொஞ்சம் அவசரமா என்னோட வர்றியா? என்னோட டிவோர்ஸுக்கு வாதாடின வக்கீல் ராமபத்ரனை அர்ஜண்டா கூட்டிண்டு வரணுமே!”
“ஏன்... என்ன சங்கதி?”
“காலைலே பிடிச்சு என் விவாகரத்து விஷயம் ஒரு இஷ்யூவாகி மித்ரா கல்யாணம் இழுபறி ஸ்டேஜுக்கு வந்துட்டது.”
திடுக்கிட்டாள் கல்யாணி.
இழுபறி நிலையா? கல்யாணம் நின்றுவிடுமா? சேச்சே, அப்படி நடக்கக் கூடாது. பாவம் சௌம்யா வீட்டார்! என்ன ஆவார்கள் இந்த மற்றோர் அதிர்ச்சியால்?
“யார் தகராறு பண்றது?”
“மாப்பிள்ளையோட அப்பா! யாரோ அவருக்குத் தெரிஞ்சவன், எங்காத்துக்கு வேண்டப்படாத ஆசாமி என்னமோ கயிறு திரிச்சு விட்டிருக்கான்.”
“என்னண்ணு?”
“என்னோட நடத்தை சரியில்லேண்ணு தான் ஆம்படையான்காரன் விவாகரத்து வாங்கிண்டு போயிட்டான்னு.”
“வாட் ரப்பிஷ்?”
“நாம் அப்படி சொல்லலாம். அவா நம்பணுமே?”
கல்யாணியின் முகம் வெளுத்தது. விஷயமே தலைகீழ். அவன் நடத்தை கெட்டவன். அதற்காக சௌம்யா வாங்கிய விவாகரத்து அது.
“ஜட்ஜ்மெண்ட் காப்பி ஒன்னண்டே இல்லியா? எடுத்து அவங்க மொகத்திலே விட்டெறியறது தானே!”
“அதெல்லாம வக்கீலண்டயே கொடுத்துட்டேன்!”
“சரி, நீ கல்யாண மண்டபத்துக்குப் போ! நான் அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பிய வாங்கிண்டு, வக்கீலையும் கையோட அழச்சுண்டு வர்றேன்.”
“நீ மட்டும் தனியாவா போறே? நானும் வர்றனே.”
“வேணாம். இந்த நேரத்திலே நீ என்னோட வந்தா ஏதோ செட்டப் பண்றாப்பிலே ஆயிடும்.”
“நீலாவையாவது கூட அழைச்சுண்டு போயேன்!”
விநாவைக் கல்யாணியோடு இணைத்து டேபிள் வம்பு பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட நீலா, முகம் கறுத்துத் தலை தொங்கி நின்றாள்.
“வர்றதானா வரட்டும். இது விநாயகத்தோட ஆட்டோ”
சௌம்யாவுக்கு அவர்களிடையே நடந்தது தெரியாது.
“ஏன், இந்த ஆட்டோவிலே இவ ஏற மாட்டாளோ? அப்படீன்னா நான் வந்த ஆட்டோவில் போய்க்கயேன்.”
கல்யாணி நீலாவைப் பார்த்தாள்.
அதற்குள் விநா ஓட்டமும் நடையுமாக வந்தான்.
“ஸாரி மேடம்! ஒங்களைக் காக்க வச்சுட்டேன் ஆபீஸுசுக்கு லேட்டாவப் போவுது... அட இவங்க எங்க வந்தாங்க? தங்கச்சி கல்யாணமில்லே.”
நீலா அவனது மாசற்ற சௌஜன்யத்தைப் பார்த்தாள். அவன் முகம் குன்றியது.
“இந்த ஆட்டோவிலேயே போய்க்கறேன், சௌம்யா.” என்று நீலா திரும்பி அவளிடம் சொன்னாள்.
“சீக்கிரம்... சீக்கிரம்... எல்லாம் ஒன் கைலயும் வக்கீல் கைலயும் தான் இருக்கு கல்யாணி!”
சௌம்யாவின் முகம் பரிதவித்தது.
“நீ கவலையே படாதே!”
விநா இருவரையும் மாறி மாறிப் பாரத்தான்.
நீலா வந்து உட்கார, ஆட்டோவிற்குள் இடம் விட்டு நகர்ந்தாள் கல்யாணி.
“விநா, வண்டியத் திருப்பிக்கோப்பா! வக்கீல் ராமபத்ரன் வீட்டுக்குப் போகணும்.”
மறுகேள்வி கேட்காமல் விநா ஆட்டோவை வளைத்துத் திருப்பினான்.
“கொஞ்சம் வேகமாப் போகணும் விநா! முகூர்த்த நேரம் முடியறத்துக்குள்ளற வக்கீலைக் கல்யாண மண்டபத்துக்குக் கையோட கூட்டி வரணும்!”
ஏதோ பிரச்சினை என்று விநாவுக்குப் புரிந்தது. வேறொருத்தி கூட உட்கார்ந்திருந்ததால் என்னவென்று கேட்க விரும்பவில்லை.
ஆட்டோவின் வேகம் கூடியபோது, கல்யாணி இன்னும் இன்னும் அதன் வேகம் அதிகரிக்காதா என்று பதைத்தாள்.
இந்த நீலா, இந்த விநா, சற்று முன்பு நெஞ்சில் உயர்ந்திருந்த வெறுப்பின் கரையான் புற்று, எல்லாமே சிறுத்துச் சிதிலமாகி சாமான்யமாகி விட்டனர்.
மித்ரா... மித்ரா...
‘ஒரு வக்கீல் வந்து, ஒரு ‘ஜட்ஜ்மெண்ட் - காப்பி’ பார்த்து, ஒரு தற்காலிக சமரசம் நேர்ந்து, உன் கழுத்தில் மூன்று முடிச்சு, நீ அலையோஅலை என்று அலைந்த மூன்று முடிச்சு விழுந்து விட்டால் மட்டும் போதுமா?
அப்புறம்? ஆரம்பத்திலேயே அபஸ்வரம் வாசிக்கிற இவர்களிடம் நீ எப்படி குப்பை கொட்டுவாய்?’
கல்யாணி அந்தக் கவலையை ஒதுக்கி எறிந்தாள் 
வக்கீலிடம் என்ன பேசுவது? எப்படி அவரை அழைத்து வருவது?
பரபரவென்று யோசனைகள் மொட்டு விரிந்து ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. அவள் உள்ளேயிருந்து வேறொரு கல்யாணி, ஒரு பஞ்ச கல்யாணி குதிரை வேகம் கொண்ட வெளியேறி வந்தாள்.
வக்கீல் அவளைப் பார்த்ததும் அந்த முகத்தில் ஓடிய வேகத்தின் இழுப்பிற்குத் தானே ஆட்பட்டார்.
என்ன விடுதலை அது!

Tuesday, 5 February 2013

காதல் என்பது என்ன?


காதல் என்பது என்ன?
1
“விளக்கை அணைச்சுடட்டுமா?”
வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது.
அது ஊர ஊர, அவள் உள்ளங்கை குறுகுறுத்தது. ஒரு லைட்டைப் போட்டுப் போட்டு அணைப்பது போல், மின்மினியின் வால்புறத்தில் மிளிர்ந்து அணையும் ஓர் ஒளித்துளி.
திரும்பிய வினயாவின் முகவெட்டுத் தோற்றத்தில் ஒரு செல்லக் கோபம். இகழ்ச்சி. ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’
“ஏய்.. வௌக்கை அணைச்சா மின்மினி எஃபெக்ட் நல்லாத் தெரியும்னு சொன்னேன்.”
கண்களைத் திருப்பி வினயா மின்மினியைப் பார்வையிட்டாள்.
அவன் துணிந்து விளக்கை அணைத்தான். சுருட்டி வைத்திருந்த பாய் விரிவது போல் இருள் விரிந்தது.
அந்த மின்மினி தவிர அறையில் வேறு வெளிச்சமில்லை.
விநோத்தின் கன்னம் வினயாவின் கன்னத்தோடு இழைந்தது. இரண்டு கன்னங்கள் ஒட்டிய இருமுகங்களும் மின்மினியைப் பார்த்தன.
“வீட்டிலே யாருமில்லேங்கறதே தெரியாது. ஆக்சுவலா எல்லார்ட்டயும் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.”
அவள் பேசவில்லை. அவன் நெருக்கம். அவன் வாசனை. தன் கழுத்தின் மீது படர்ந்த அவனது இடது கை.
“நான் நாளைக்குப் பொறப்படறேன் வினய்.”
அவள் எதிர்பார்த்த முத்தம்... வருடல்... இல்லை. அவன் கண்ணியம் கடைப்பிடித்தான்.
“அப்புறம் எப்ப?” - அவள் சுவாசம் அவன் மீது படர்ந்தது.
“தை மாசம்... தயாராயிரு... மாப்பிள்ளையாத்தான் வருவேன்.”
அவள் பெருமூச்செறிந்தாள்.
நடுவிரல் நுனி தொட்ட மின்மினி. பயணம் முடிந்தது போல் நின்றது. பிறகு திகைத்து, தலைகீழாக விரல் மீதே நகர்ந்தது.
அதன் சௌகர்யம் உத்தேசித்து அவள் உள்ளங் கையைத் திருப்பினாள்.
“இதை எங்கேருந்து புடிச்சே?”
“வீட்டுக்கெணத்துக்குள்ளே! தூக்கணாங்குருவி கூடு கட்டியிருக்கு. தூக்கி உள்ளார பார்த்தேன். உள்ளே புளியங் கொட்டை அளவு களிமண்லே இதைக் குருவி ஒட்ட வச்சிருக்கு. ரிலீஸ் பண்ணிக் கொண்டு வந்தேன்” என்றாள் வினயா.
“பாவம் குருவி. இன்னிக்கு ராத்திரி அதுக்கு லைட் இருக்காது.”
“ஆஆமாஆம்... நீ எவ்வளவு கெட்டிக்காரனோ அதைவிட அது க்ளவர். வேற மின்மினி தேடிக்கும்.”
“என்ன சொல்றே... நான் வேற மின்மினியைத் தேடிப்பேங்கறியா?”
“மாட்டியா என்ன? மைசூர்ல மின்மினிகளுக்கா பஞ்சம்?”
விநோத் கோபித்துக் கொள்ளவில்லை.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”
“ஆல்ரைட்... ஓக்கேன்னு.”
“அது மெய்யாக இல்லேன்னாலுமா?” கழுத்திலிருந்து அவன் கை விலகித் தோளில் ஒரு புறா போல் கனமின்றி அமர்ந்தது.
“த பார் விநோத்! இந்த தெய்வீகக் கதைகள்ளாம் வேணாம். அதெல்லாம் குட் ஓல்ட் கதைகள்.”
சட்டென்று தன் கன்னத்தில் ஈரம்! கண்ணீரா?
“ஏய்... ஏய்.. விநோத்! சும்மா விளையாட்டுக்கு...”
அவனிடம் பதில் இல்லை.
“விநோத்... விநோத்.”
மௌனம். அவள் விளக்கைப் போட்டாள்.
அவன் கர்ச்சீப்பால் முகம் துடைத்தான். “நான் வர்றேன்.” வருத்தம் மறையாத சிரிப்பு. விடைபெற்றான். என்ன சொன்னோம்? ஏன் இப்படி ஆனான்...? அவன் போன பிறகு ஒரு மின்மினி வெளிச்சம். இதயத்தில் ஒட்ட வைத்த வெளிச்சம்.

2
“எப்படா ஆஸ்பத்திரியிலேர்ந்து கொண்டாந்து வீட்டிலே தள்ளுவோம்னு காத்துக்கிட்டிருந்தீங்களா?”
விநோத்தை மட்டும் எதிர்பார்த்த வினயா கட்டிலில் படுத்தவாறே பொரிந்து தள்ளினாள்.
பின்னாலேயே நயனதாரா. மைசூர் யூனிவர்ஸிட்டியில் விநோத்தின் சகா.
சங்கடமான முகத்தைச் சரிப்படுத்தி, ‘ப்ளீஸ் கம் இன்’ என்று நயனதாரா வருவதை வினயாவுக்கு உணர்த்தினான்.
‘நர்ஸிங் ஹோமி’லிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து அழைத்து வந்தவன், மூன்று மணி நேரம் காணாமல் போன எரிச்சலை வினயா ஒரு நாசூக்கு முகமூடியால் மறைக்க வேண்டி வந்தது.
சிரிப்பினால் நயனதாரா அந்தச் சூழலுக்கே ஒளியேற்றுவது மாதிரி வந்தாள். ஒரு கையில் ‘பொக்கே.’ இன்னொரு கையில் பிறந்திருக்கிற குழந்தைக்கு ஒரு கிஃப்ட்.
நயனதாராவுக்கு கறுத்து அடர்ந்த இமைகள். பார்ப்பவர்களை ஒரு மயிலிறகு வருடும். ஒரு காந்த மையம் கவரும்.
கருள்முடி, சுண்டி இழுக்கும் உதடு. காஷ்மீர் நிறம். அவள் வந்தாலேயே வினயாவுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை எழும். ராஜகன்னிகையைச் சந்திக்கிற சேடிப்பெண் போல.
“ஹாப்பி வெட்டிங் டே!” நயனதாரா சிரித்துச் சிரித்து, வினயாவின் உள்ளே திரண்ட அழுக்கைத் துரத்த முயன்றாள்.
‘அட, இன்னிக்கு செப்டெம்பர் நாலா? எனக்கு மறந்தே போச்சே! இவளுக்கு எப்படித் தெரியும் விநோத் சொல்லாமல்?’
“தாங்க்யூ” என்று சிரித்தவாறே பரிசுகளை ஏற்றாள்.
பக்கத்தில் தொட்டிலில் உறங்கிய மின்னியின் கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டு, “ஹவ் நைஸ் எ பேபி!” என்றாள் நயனதாரா.
“உட்காருங்கோ” என்று வினயா நாற்காலி காட்டினாள்.
பிறகு விநோத்தைத் திரும்பிப் பார்த்து, “இவங்களுக்கு ப்ரிஜ்லேருந்து ஜூஸ் கொண்டு வாங்களேன்” என்றாள்.
“நோ... வேண்டாம்! இப்பத்தான் விநோத் ட்ரீட் குடுத்துச்சு...” அவள் கண்களின் இங்கிதமான வெள்ளையான மறுப்பு.
மானச கங்கோத்ரி வாழ்க்கை. மைசூர் வெய்யில். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சின்னஞ்சிறு அசைவுகள் கூட ஏற்படுத்தும் நிறைவு.
இப்படி கால் மணிநேரம் பேசிக் கொண்டிருந்தாள். வினயாவுக்கு ஜலதரங்கம் கேட்ட மாதிரிஇருந்தது. அவள் விடை பெற்றுச் சென்ற பின் விநோத் நெருங்கினான்.
உறங்கும் சிசுவின் உச்சந்தலையில் உதடு பதித்தான். பின்பு தன் சட்டைப் பையிலிருந்து ஒரு மோதிரப்பெட்டி எடுத்துத் திறந்தான்.
தன் விரல் ஒன்றில் மாட்ட வந்த கையை வினயா உதறினாள்.
“என்னோட மேரேஜ் டே எனக்கே ஞாபகமில்லே. எவளுக்கோ ஞாபகமிருக்கு. இவ்வளவு நேரம் அவளோட போய்ச் சுத்திக் கூத்தடிச்சதுக்கு இப்படி ஒரு லஞ்சமா?” வினயா வெடித்தாள்.
“அவ எவளோ இல்லே. என்னோட சகா.”
“எதுல... உங்க செக்ஷûவல் லைஃப்லயா?”
அவன் பளீரென்று கன்னத்தில் அறை விழுந்த மாதிரி உதடுகளை இறுக்கினான்.
“வினயா... நீ ரொம்ப ‘வீக்’ காயிட்டே!”
“ஷ்ஷ்... இந்த சமாளிப்பெல்லாம் வாணாம்.”
“ஆல்ரைட்... நான் என்ன சொல்லணும்?”
“எங்கே போனீங்க இவவளவு நாழி?”
“இது நம்மோட மூணாவது திருமணநாள். ஒனக்கு ஒரு சின்ன ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்’ தர நயனாவை அழைச்சிட்டு ஜ்வல்லரிக்குப் போனேன். செலக்ஷன்ல நான் எவ்வளவு ‘புவர்’னு ஒனக்கே தெரியுமே!”
“நோ... . யூ ஆர் நாட் புவர். நயனதாராவை செலக்ட் பண்ணியிருக்கீங்களே!"
மோதிரப் பெட்டியை உள்ளங்கையில் மடித்து, அவன் மார்பில் குறுக்கே கைகட்டி நின்றான்.
“என்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே இவளோட ஒங்களுக்குச் சவகாசம்... உண்மைதானே!”
அவன் அவளைச் சலனமின்றிப் பார்த்துத் தலையசைத்தான்.
“யூ லவ்ட் ஹெர்!”
அவன் இறுகிய முகம் நெகிழ்ந்தது. மெதுவாக உறுதியாகச் சொன்னான்.
“இப்பவும் கூட.”
“இப்படிச் சொல்ல ஒங்களுக்கு வெக்கமால்லே?”
“உண்மை வெட்கப்படாது வினயா!”
“தென் கெட் அவுட். போங்கோ... ரெட்டை வேஷம் வேண்டாம். போய் அவளோடேயே பொழையுங்கோ. டிவோர்ஸுக்கு நான்தயார்!”
விநோத் காலியாக இருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். லாபரட்டரியில் சுடர்விடும் ஸ்பிரிட் விளக்கைப் பரிசீலிப்பது போல் அவளையே பார்த்தான்.
“வினயா... நான் உன்னை ‘லவ்’ பண்ற விஷயத்தை மொத மொதல்ல இவகிட்டத்தான் சொன்னேன். அவதான் என்கரேஜ் பண்ணினா... அவதான் தைரியம் கொடுத்தா!”
அவள் வியப்போடு விநோத்தைப் பார்த்தாள்.
“லவ்! ஒனக்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியிலே... ஒரே குறுகலான அர்த்தம்தான் தெரியும். ஒனக்கு பொஸஷன். அதான் பொறாமை. அதான் எல்லாம் மஞ்சள் காமாலைக் கண்ணாத் தெரியறது.”
அவன் இத்தனையையும் சுடாமல் இதமாகப் பக்குவமாகச் சொன்னான்.
அவள் அவன் கண்களைப் பார்த்தாள். மெய்சிலிர்த்தது. இதயத்தில் ஒட்ட வைத்திருந்த ஒரு மின்மினியை அவள் விடுவித்தாள்.

3
தூக்கம் வராத இரவுகள் தொடங்கியது என்று?
மொட்டை மாடியில் புறங்கைகளைத் தலைக்குப் பின் கோத்து யோசித்தான் விநோத்.
நட்சத்திரங்கள் இப்போதெல்லாம் அவனிடம் அடிக்கடி பேசுகின்றன. அடிக்கடி உறக்கம் கலைந்து விடுகிறது.
தொட்டு உலுக்கினாலு கலையாத தூக்கம் நயனதாராவோடு போய் விட்டதா?
கீழே பெட்ரூமில் வினயா படுத்திருக்கிறாள். எழுந்து வந்ததைக் கவனித்திருப்பாளோ? இருக்கலாம். விசாரிக்கச் சோம்பலுற்றுத் திரும்பிப் படுத்திருக்கலாம்.
அவளுக்கும் வேலை; ஒழியாத வேலை. மின்னி வளர்ந்து விட்டாள். ஜெகனும் வளர்ந்து விட்டான். விழித்து எழுந்ததும் அவர்களுக்குப் பிரஷ்ஷில் பேஸ்ட் பிதுக்கி நீட்டுவது முதல் இரவில் வாயிலிருந்து அவன் சூப்பும் விரலை அகற்றி, குப்புறக் கவிழ்ந்து படுத்திருக்கும் மின்னியின் முகம் திருப்புவது வரை, ஒன்று தொடர்ந்து ஒன்றாகச் சங்கிலிகோத்த வேலைகள்.
அத்தோடு இப்போது ஆபீஸும் சேர்ந்து கொண்டது. ஆச்சா போச்சாவென்று சமையல் கட்டிலிருந்து விடுபட்டு ஆபீஸுக்கு ஓடும் ஓட்டம்.
“வேலையை விட்டுடு வினயா!”
பலமுறை சொல்லிப் பார்த்து விட்டான். இரண்டு பேரும் ஓடி உழன்று சம்பாதிக்கிற பணம், நாலு பேருக்காகக் காட்டும் ஆடம்பரத்தில் கரைவதைச் சுட்டிக் காட்டினான்.
“விநோத், வெறுமே பணம் சம்பாதிக்கத்தான் ஆபீஸ் போறேன்னு நெனைக்கறீங்களா?”
அவனுக்கே கூடத் தெரியும். அவன் அவ்வளவு முட்டாளல்ல. இருந்தும் சொன்னாள். “எனக்கு வேற ஒரு உலகம் வேண்டியிருக்கு!”
அவள் மேலும் வளர்ந்தாள்.
“நேத்திக்கு மீனாட்சி பட் வீட்ல என்ன நடந்தது தெரியுமா? இஸ்திரி வண்டிக்காரி அயர்ன் பண்ணிக் கொண்டு போன துணிகளை எல்லாம் தேச்சு, வீடு வீடாக் கொண்டு போய்க் கொடுக்க வந்திருக்கா. திடீர்னு ஒரே இடி மின்னல். பயந்து போய், மீனாட்சி பட் வீட்டிலேயே வச்சுட்டுத் திரும்பிட்டா.
“ராத்திரி பேஞ்ச மழையிலே மீனாட்சி தெருவிலே ஒவ்வொரு வீட்லயும் தண்ணி உள்ளே பூந்துட்டது. சோபா... ப்ரிஜ்... வாஷிங் மெஷின் எல்லாம் ஹோகயா.
“சலவைத் துணி கதியைச் சொல்லவே வேணாம் பாவம் சலவைக்காரி! மறுபடியும் எடுத்துட்டுப் போய் அவளா மெனக்கெட்டுத் துவைச்சு அயர்ன் பண்ணிக் கொண்டு வந்திருக்கா. மீனாட்சி தெருவிலே ஒவ்வொரு வீட்லயும் இப்ப தண்ணி தான் விஸிட்டர்.”
“எதற்கு இந்தக் கதை? எதைத் தொட்டு, ஏன் வளர்க்கிறாள்?’
“வெளியே வேற உலகம். நோ, பல உலகங்கள் இருக்கு விநோத். நாலு சுவர் தாண்டி, இந்த நாலு சுவரை நிக்க வைக்கப் படாதபாடு படற உலகங்கள் சொழல்றது, எந்த மையப் புள்ளியிலே எந்தெந்தத் தொடு கோணங்கள்ளே நம்ப நாலு சுவர் நிக்கறதுன்னு புரிஞ்சுக்க வேணும் எனக்கு! சுத்திப் பார்க்க பார்வை வேணும். அதுக்கு ஆபீஸ் ஒரு லெவல் க்ராஸிங்.”
இப்போதெல்லாம் வினயா அன்றாடம் வளர்கிறாள். வளர்ந்து கொண்டே வருகிறாள். அவள் வளர வளரத் தன்னை விட்டு விலகிக் கொண்டிருப்பது போல் விநோத்துக்குள் ஒரு தனிமை.
பழைய நாட்களில் இப்படித் தூக்கம் கலைந்து மொட்டை மாடிக்கு வந்தால், ஐந்தாவது நிமிஷம் குட்டியைத் தேடும் தாய்ப்பூனை மாதிரி, பின்தொடர்ந்து வருவாள்.
இப்போது தலை தூக்கிப் பார்த்து விட்டுப் படுத்து விடுகிறாள்.
அலட்சியம் அல்ல. களைப்பு.
விநோத்தின் மனசில் ஓர் ஆந்தை இப்போது அடிக்கடி உட்காரப் பார்க்கிறது. கொட்டக் கொட்ட அவனையே பார்க்கிறது. விரட்ட முயன்றாலும் போக்குக் காட்டி விட்டு மீண்டும் வருகிறது. உட்கார்கிறது. பேசுகிறது.
‘நீ தனிமையுற்றுப் போனாய் சகோதரா! என் பெயர் ஆதி துக்கம். நானும் நீயும் ஒரே வார்ப்பு. இங்கேயேதான் ரொம்ப நாளா இருக்கேன். நீ கண்டுக்கிட்டதே இல்லே.
நயனதாரா இருந்தா! நீ என்னைக் கண்டுக்கலே. அப்புறம் வினயா... சுத்தமா மொகம் திருப்பிட்டே.நயனதாரா இப்போ நட்சத்திரத்திலே சேர்ந்துட்டா. வினயா இப்போ விவேகி ஆயிட்டா. ஹிஹ்ஹி... லெட்ஸ் மீட் நௌ!’
மன ஆந்தை பேசவில்லை. அலறியது. சட்!
விநோத் எழுந்தான். நேரே நடந்து எதிர்ப்பக்கக் கைப்பிடிச் சுவருக்குப் போனான். தூரக் கிழக்கில்அந்த மயானம். இப்போதும் ஒரு பிணம் எரிகிறது. தீவட்டி வெளிச்சம் போல் பிணம் எரியும் ஜ்வாலை.
இதே மயானத்துக்குத்தான் ட்ரௌமா கேர் யூனிட்டிலிருந்து நயனதாராவையும் கொண்டு போனார்கள்.
டில்லி தியேட்டர் தீப்பிடித்ததில் தன் சகோதரனும் செத்ததாக, ஒரு முழு ஏந்திய மௌன பாரத்தோடு சொன்ன அதே நயனதாரா, ஒரு நாற்சந்தி விபத்தில் போய் விட்டதாகச் செய்தி வந்தபின், விநோத் போனான். மயானம் வரை போனான்.
திரும்பி வீடு வந்து தலை முழுகும் போது வெந்நீர் விளாவிக் கொண்டே வினயா சொன்னாள்.
நயனதாராவுக்கும் தனக்கும் மத்தியில் என்னென்ன?... எவ்வளவு?
எல்லாம் தெரிந்தவள் வினயா.
எனினும் மறக்கச் சொல்கிறாள்.
ஒரு பெண்ணாக அல்ல. ஒரு மனைவியாக அல்ல. ஒரு மனுஷியாக, சர்வ சாதாரணமாக.
‘வினயா... நீ ஏன் இப்படி வளர்ந்து கொண்டு போகிறாய்? நார்மலா இரேன்.
‘எவளோ ஒருத்தி செத்தாளேன்னு புருஷங்காரன் மாதிரி உருகறியே. பெண்டாட்டி நான் ஒருத்தி கல்லாட்டம் இருக்கேன். நீ உருப்படுவியான்னு சபியேன். பொறாமையிலே தகிச்சுப் புகையேன். வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கயேன்.’
‘அப்ப நான் ஒங்கூட மல்லுக்கட்டிப் போராடறப்ப ஒரு மாறுதல் வந்து நயனதாரா நெனைப்பை மாத்திக்குவனே.’
‘இதை அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியாது. நீ ஏன் வளரவே மாட்டேங்கறே விநோத்துன்னு ஸ்கூல் டீச்சர் மாதிரி பார்ப்பா.’
அல்லது, ‘உன் காதல்செத்துப் போச்சு விநோத்! நீ என்னைச் சார்ந்திருக்க ஆரம்பிச்சுட்டே. நையி நையின்னு என்னண்டயே சுத்தி வர்றே. சார்ந்திருப்பதற்குப் பெயர் காதல்இல்லே.அது அடிமைத்தனம். காதல் சுதந்தரமானது. அது உபகிரகம் அல்ல. தானாய் ஒளி விடும் தனிக் கிரகம் என்று தத்துவ முத்துக்களாக எடுத்துத் தட்டில் வைக்க ஆரம்பித்து விடுவாள்.’
அந்த இரண்டினாலும் மன ஆந்தை வெளியேறாது.
விநோத் தூரத்தில் எரியும் பிணத்தின் ஜ்வாலையையே உற்றுக் கவனித்தான். அதனிடம் கேட்டான்.
காதல் என்பது என்ன?
தெரிந்த அர்த்தங்கள், பழக்கங்கள், சுவைகள், படிய வைத்த படிமங்கள், பிரமைகள், எல்லாம் அந்தக் கேள்வியின் கல்வீச்சில் திடீரென்று விலகி, நிறமற்ற சுத்த ஜலம் தெரிந்தது.
காதல் காதல் காதல்... காதல் போயிற் சாதல் சாதல் சாதல் என்று ஏன் சொன்னான் மகாகவி.
அது போய் விட்டதா?
வழி தெரியாத காட்டின் வெட்ட வெளியில் நிற்கும் திகைப்பில் நின்றான் விநோத்.
தூரத்தில் ஒரு நாய் குரைப்பதும் ‘பாரா உஷார்’ என்று மானச கங்கோத்ரியின் கூர்க்காக் குரலும் கேட்டன.
பின்னால் காலடிச் சப்தம் கேட்டது. திரும்பினால், வினயா.
“என்ன இன்னிக்கும் தூக்கம் வரலியா?” என்று இரண்டு கைகளையும் பின்னால் வளைத்து சோம்பல் முறித்து தூக்கக் கலக்கம் விலகாமல் நின்றாள்.
“ஆமாம்.”
“நயனதாரா?” அவள் நினைவா என்று கேட்கிறாள்.
“.......”
“ஸீ விநோத்! கான் ஈஸ் கான். ஒங்களை நான் மறக்கச் சொல்லலே. அவஸ்தைப் படுத்திக்கணுமா?”
“........”
“ஆயிரம் நடக்கிறது. மீனிங்ஃபுல் அண்ட் மீனிங்லெஸ். அதை அதை அப்பப்ப ஒரு லாக்கர்ல வச்சுப் பூட்டிட வேண்டியது தானே!”
உனக்கு முடியுமா என்று கேட்க நினைத்தான்.
“ஒங்களுக்கு ஆண்ட்டி டிப்ரஸென்ட் மாத்திரை தேவைப்படறது. நாளைக்கு ஒரு சைக்கோதெரபிஸ்டைப் போய் கன்ஸல்ட் பண்ணுவம்!”
விநோத் தனக்குள் கசப்பாகச் சிரித்தான். கனத்த பிரேம் மாட்டிய மஹாபவர் கண்ணாடி பின்னே தெரியும், சைக்கோதெரபிஸ்டின் கண்கள் தெரிந்தன.
காதல் என்பது என்ன டாக்டர்?
கேட்டால் ரியாக்ஷன் எப்படி இருக்கும். வினயா அவனை நெருங்கினாள்.
நட்சத்திர வெளிச்சம் மட்டும் தெரிந்த அரையிருளில் மூன்று விரல்களால் அவன் மோவாயை உயர்த்தினாள்.
‘ப்ச்... ப்ச்... ப்ச்” என்று இது சரியில்லை என்பது போலப் பரிவோடு உரிமையோடு தலையசைத்தாள்.
நெருங்கி வந்து அவன் கழுத்தைச் சுற்றிக் கை கோர்த்து அணைத்தாள். பிறகு அவன் முகத்தை அருகே இழுத்துத் தன் அதரங்களின் மீது அவன் உதடுகளைக் கவிழ்த்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து விலகினாள். பெருமூச்சு விட்டாள்.
“நேரமே கெடைக்கறதில்லே விநோத்!”
எதைச் சொல்கிறாள்? எதற்குச் சொல்கிறாள்?
“நீங்க லோன்லியாய்ட்டது புரியறது. ஆக வேணடாமே. அவசியம் இல்லியேன்னு தோணும். எல்லாம் இயற்கையாச்சே. வருத்திக்கலாமான்னு சொல்லத் தோணும். சொன்னா சரிப்படாது. ஒருவேளை யூ மே நீட்இட். கொஞ்ச காலத்துக்கு.”
அவள் நேற்றை விட இன்று வளர்ந்திருப்பதை விநோத் ஒரு பயம் கலந்த வியப்போடு கவனித்தான்.
“விநோத்... விநோத்... விநோத்... ஐ ஆல்வேஸ் லவ் யூ விநோத். நூறு நயனதாரா வரட்டும் போகட்டும். ஐ வில் லவ் யூ.”
வினயா திடீரென்று உடைந்தாள். விம்மத் தொடங்கினாள்.
“வினி... வினி” என்று அவன் பதறி அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் மனசில் அந்த ஆந்தை பறந்து விட்டிருந்தது.

Sunday, 3 February 2013

பால் டம்ளர்


பால் டம்ளர்
“நல்லா ஆத்தி ஒரு பால் குடுப்பா!”
திரும்பிப் பார்க்க வைக்கிற கனமான சுருதியில் வந்தது அந்த வெண்கலக் குரல். பால் கடை அடுப்பில் காய்ந்த பாத்திரத்தில் இருந்து கவிந்த நுரை ஒரு சிற்றொலியாக ஒலித்தது. அதை ஒரு அலுமினியக் கைப்பிடிகி பாத்திரத்திற்கு மாற்றி கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டே பழனி திரும்பினான்.
சந்தனக் கலர் கோட்டு, மழை வருமோ என்ற எதிர்பார்ப்பில் கக்கத்தில் இடுக்கிய குடை, ட்யூப் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் கடுக்கன் குடுமி. நெற்றியில் வியர்வை போக மிஞ்சி நிற்கும் சந்தனப் பொட்டு.
பால் கேட்டவரின் அங்க லட்சணங்களை அளந்த பழனி பெரியவருக்கு வயது அறுபதுக்கு மேல் என்று கணித்தான்.
பிறகு சொன்னான்.
“நேரம் ஆவும். பால் காயணும்.”
நுரை ஒலிக்கிற டம்ளர்களைப் பெஞ்சில் காத்திருந்தவர்களிடம் ஒவ்வொன்றாய் நீட்டியபடியே அவன் பதில் சொன்னான்.
பெரியவர் தொடர்ந்தார். “கால் மணி நேரமா கொழந்தை பாலுக்கு அழுவுது. அர்ஜண்டா வேணுமே!”
கிழவர் குரலில் பாலுக்கு அழும் குழந்தையின் தவிப்பு முட்டமிட்டது.
“நான் என்னாங்க பண்றது... இவங்க ரொம்ப நேரமா குந்திகினு இருக்காங்க.”
- மேடையிலிருந்து பால் நிரம்பிய டம்ளர் வரிசையில் ஒவ்வொன்றாய் யந்திரம் போல் எடுத்து உட்கார்ந்திருந்தவர்களிடம் நீட்டியபடியே பழனி பதிலளித்தான்.
கிழவர் அந்த டம்ளர்களையும் உட்கார்ந்திருந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்தார். ஏழு டம்ளர்கள் கரங்களில் ஏறி வாயைத் தீண்டிவிட்டன. பழனி நீட்டிய எட்டாவது டம்ளரைக் கடைசி நபர் வாங்கவில்லை.
“நான் வெய்ட் பண்றேன். பெரியவருக்குக் கொடுத்துடுங்க. குழந்தை அழுவுதாமே!”
கிழவர் நன்றியோடு அவனைப் பார்த்தார். மற்ற ஏழு டம்ளர்கள் எதையும் பொருட்படுத்த நேரமின்றிக் காலி ஆயின.
“பாட்டில் கொண்டாந்து இருக்கீங்களா?”
“இல்லியே. இந்தா ஒரு ரூபா அட்வான்ஸ், வச்சிக்கோ!’
“கொடுத்துட்டுப் போங்க. டம்ளர் வெலையே ரெண்டு ரூபா.”
“இந்தா!” கிழவர் அவசரமாக இன்னொரு ரூபாயை எடுத்து நீட்டினார். மீண்டும் ஒருமுறை பாலை விட்டுக் கொடுத்த நபரைப் பார்த்துப் புன்னகையில் நன்றி செலுத்தினார். பின், மெதுவாகத் தள்ளாடியவாறு நடந்தார்.
பழனி அந்தக் கிழவரிடம் இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கியதற்குத் தாமதமாக வெட்கப்பட்டான். இந்தக் காலத்தில் யாரை நம்ப முடிகிறது என்றொரு சமாதானம் பிறந்து அவன் தன்னை நியாயப்படுத்திக் கொண்டான்.
‘அந்த டம்ளர் போனாத்தான் என்னா... நாளையிலேருந்து எனக்கெதுக்கு டம்ளர்!’ என்று அவன் யோசித்தவாறே காயாத பாலுக்கு மேல் அலுமினியத் தட்டை மூடித் துணியில் பாத்திரத்தைப் பிடித்துப் பத்திரமாய்க் கீழே இறக்கி வைத்தான்.
கரியடுப்பில் சாம்பல்குவிந்திருந்தது. அடுப்பைக் கரித்துணியில் பிடித்து மேடையிலிருந்து கீழே இறக்கிக் ‘கடகட’வென்று அடித் தகட்டை ஆட்டிச் சாம்பலை உதிர்வித்தான்.
கை யந்திரமாய் ஓடி மிஞ்சிய நெருப்பின் மீது டின்னிலிருந்த கரித் துண்டுகளை எடுத்து நிரப்பியது. மனம் மட்டும் தண்ணீரில் சிந்திய எண்ணெயாக மிதந்தது.
“நாளைக்குக் கடை மூடி இருக்கறதைப் பாத்து வாடிக்கையா வர்றவங்க வந்து பாத்துட்டுத் திரும்பிப் போவாங்க. பஸ் ஸ்டாண்டிலே ‘குபார்’ கௌம்பிடும். காதும் மூக்கும் வச்சு புல்லாக்கு மாட்டி கதை வுடுவானுங்க. எல்லாருக்கும் இன்னிக்கே சொல்லிட்டிருந்தா நல்லதோ... ம்ஹுகும்... என்னான்னு சொல்றது... சொல்றது... சொல்றதுக்கு என்னா இருக்கு? யார் இருக்காங்க?”
பதினேழு வருஷமாக பஸ் ஸ்டாண்டிற்குப் பக்கத்தில் இரவில் பால் காய்ச்சி விற்று வந்த பழனி, திடீரென்று நேற்று இரவு கடையை மூடி விடுவது என்று தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானத்தைப் பங்கிட்டுக் கொள்ள அவனுக்கு யாருமில்லை. கேரளா, மைசூர் என்று மூன்று வருஷத்துக்கு முன் சுற்றுப் பயணம் புறப்பட்ட ஒரு டூரிஸ்ட் பஸ்ஸில் பழனியின் குடும்பம் - அவன் அம்மா, மனைவி, மூன்று குழந்தைகள் - திரும்பி வரவில்லை. அந்த டூரிஸ்டு பஸ் ஒரு மலைச் சரிவில் கவிழ்ந்து நாலைந்து உயிர்கள் தப்பித்தன. அவர்கள் வேறு யாரோ. எனவே, அவன் செய்த தீர்மானத்தைப் பங்கிட்டு கொள்ளக் குடும்பம் இல்லை.
ஒருத்தி இருந்தாள். அவள்தான் இந்தத் தீர்மானத்திற்கே அவனை உந்தியவள். அந்த நகரத்திலிருந்து இரண்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்தவள். அங்கே அவளை சரோஜா என்று சொல்வதைவிட சாராயக்காரி என்று சொன்னால் சுலபமாக வீட்டைக் காட்டி விடுவார்கள்.
சரோஜா அந்தக் கிராமத்தை விட்டு முக்கால் மைலில் தொடங்கிய மலையில் ஒரு சிறு சாராயத் தொழிற்சாலை நடத்தி வந்தாள். நகரத்திற்கு அவள் சினிமா பார்க்க வந்தால் படம் முடிந்ததும் பழனி கடையில் பால் குடித்து விட்டுப் போவாள்.
ஐந்தாறு வருஷங்களுக்கு முன் பழனி கடையை விட்டுப் பல கடைகள் தள்ளி ஒரு கடையில் மசாலா பால் விற்று வந்த மணிக்கும் அவளுக்கும் சிநேகம் என்று பஸ் ஸ்டாண்டில் பேசுவார்கள். மணி கடையை மூடிவிட்டுப் பெங்களூர் போனான். அவள் பழனி கடைக்குப் பால் குடிக்க வந்தாள்.
குடும்பம் ஒரு நீர்க்குமிழி போன்று திடீரென்று வெடித்துப் போன சூன்யத்தில் அவன் சிதைந்து நின்ற சந்தர்ப்பத்தில் தான் சரோஜா அவன் கடையில் பால் குடிக்க வந்தாள்.
அன்று சரோஜா போகும் கடைசி பஸ் ரிப்பேராகி விட்டது. அன்று அவள் கண்மையோ, தாம்பூலக் கறை படிந்த பற்களோ பழனியின் தத்தளித்த மன நிலைக்கு ஒரு மயக்கம் தந்தது. பழனியின் வீட்டில் அவள் அன்றிரவு தங்கினாள்.
விடியற் காலை பஸ்ஸில் அவள் ஊருக்குப் புறப்பட்டதும், பழனியின் மயக்கம் தெளிந்தது. காலி வீடும் கழிந்துவிட்ட இரவும் நிரப்ப முடியாத சூன்யத்தின் நினைவுகளாய் நின்றன. விலகிய பின் மீண்டும் மூடியது போல் அவன் மனம் மூட்டம் கண்டது.
மூன்று நாள் கழித்து மீண்டும் சரோஜா நகரத்திற்கு வந்து பால் குடித்துவிட்டு பஸ்ஸுக்காகப் புறப்பட்டாள்.
பால் அன்று சீக்கிரம் தீர்ந்துவிடவே, அவளை சைக்கிளில் ‘டபிள்ஸ்’ உட்கார வைத்துக் கொண்டு, பழனி அவள் கிராமத்திற்குப் போனான்.
அன்றிரவு சரோஜாவுக்குப் பழனியின் மனசில் பாறாங்கல் தட்டுப்பட்டது பிளாஸ்டிக் கேனிலிருந்து ஒரு கிளாஸ் சாராயத்தைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். தெளிகிற மயக்கங்களால் நிரம்பாத அவன் வெறுமை அதில் சற்று மறந்தது.
அப்புறம் பழனி கடை மூடியதும் நேரே சரோஜாவின் கிராமத்திற்குப் போய் விடுவான். அவளும் அவள் தந்த சாராயமும் பழனியின் துயர்கள் ஒளியும் புகலிடமாயின.
“இத்தினி வர்ஷமா பால் கடை வச்சி ஏன்னா சம்பாரிச்சே?” என்று ஒருநாள் சரோஜா கேட்டாள்.
நகர்ப்புறத்தில் பழனி ஒரு மனை வாங்கி இருந்தான் வாங்கியதோடு சரி. கட்ட சௌகரியப்படவில்லை. எனவே, அவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.
“டசாலா பால் வித்துணு இருந்துதே மணி, அது இப்போ எங்கே இருக்குது தெரியுமா?”
“பெங்களூர்னு சொல்லிக்கினாங்களே.”
“என்ன செய்யிது, எப்படி இருந்ததுண்ணு சொன்னாங்களா?”
“இல்லே.”
“பெங்களூரிலே பெரிய பில்டிங் கட்டிடுச்சு. கட்டடம் பூரா சலவைக் கல் ‘தக தக’ன்னு ரொம்ப ஷோக்கா கீது. கன்னடத்திலே ஒரு படம் கூட எடுக்குதாம். கலர்ப்படம்.”
“அப்படியா?” - பழனி அக்கறையின்றிக் கேட்டான்.
“கப்பல் மாதிரி ஒரு கார் வச்சிருக்கு.”
“இதுக்கெல்லாம் அவனுக்குப் பணம்? எப்படிச் சம்பாரிச்சான்?”
சரோஜா, பழனி எதிரில் ஒரு நிரம்பிய கிளாஸை வைத்துச் சொன்னாள்:
“இதை வித்துத்தான் சம்பாரிச்சுது. மொதல்லே நாட்டுச் சரக்கு. அப்புறமா பீர். இப்போ பெங்களூர்லே மூணு பார் இருக்குதாம்.”
பழனி கிளாஸையே பார்த்தான்.
“ஒரு கிளாஸ் பாலை நீ என்னா விலைக்கு விக்கிறே?”
“ரெண்டு ரூபா.”
“இது பதினஞ்சு ரூபா.”
எதற்காக அந்த விலை விவரம் என்று அவளது மை படித்த கண்ணில் தேடினான் பழனி.
“பதினேழு வர்சமா பால் வித்துட்டு வாங்கின மனையிலே நீ வூடு கட்ட முடியாமே முளிக்கிறே. அஞ்சு வருசத்திலே அது பங்களா கட்டி, கார் வாங்கி, சினிமா எடுக்குது.”
தண்ணீர் மாதிரி நிறமற்றிருந்த அந்த திரவத்தைப் பார்த்தான் பழனி.
“பதினோருமணி வரிக்கும் நீ இடுப்பிலே துண்டைக் கட்டிக்கிணு நின்னுகிணே காலத்தைக் களிக்க வேண்டியது தான். வாங்கின மனையிலே வூடு கட்டறத்தை வுடு. ஒரு குடிசை கட்டக் கூட முடியாது.”
பழனி கிளாஸை எடுத்து, திடீரென்று வெளிப்பட்ட தன் வெறுமையை மூழ்கடிக்கக் கடகடவென்று குடித்தான். என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்ற பார்வையில் சரோஜாவை நோக்கினான்.
“என்னை என்னா பண்ணச் சொல்றே?”
“பால் கடையை மூடிட்டு நம்ம தொழிலைச் செய்யி... நான் ஒருத்தி ஒண்டிக் கட்டையா என்னா பேஜார்ப் பட்டுணுகிறேன். நீ என்னாடான்னா பதினோரு மணிக்கு ஆளு ஜல்சாவா சைக்கிள்ளே வர்றே. எட்டு மணிக்குக் கிளம்பிப் பூட்றே. அப்படி என்னா அங்கே பால் வித்து அம்பாரமா குமியறது கெட்டுப் போச்சு?”
பழனி குழம்பினான். அவன் போன பாதை நடுக்காட்டில் இரண்டாகப் பிரிந்த மாதிரி ஒரு தடுமாற்றம். திசை எது? எப்படிப் போவது என்று அவனுக்குத் தெரியவில்லை. தீர்மானிக்கவே மனசில் பிடிப்பில்லை.
சரோஜா, சாராயம் என்று ஒரு பாதையில் மின்மினி வெளிச்சம். இன்னொன்று மனப்பளு போன்ற இருள்.
பதினேழு வருஷம் நடந்து அதில் கால் தேய்த்த தடம். மற்றப்படி வெறுமை...
அவன் ஊசலாட்டம் அறிந்து சரோஜா விதையை ஆழ ஊன்றினாள். அவள் ஊற்றித் தந்த திரவத்தால் எண்ணம் மெதுவாய் வளர்ந்தது. அப்போது தான் மணி ஊருக்கு வந்தான். சொந்த ஊரில் அந்தஸ்தைக் காட்டும் உத்தேசத்தோடு ஹெலிகாப்டரில் ஷýட்டிங், ஏதோ லொகேஷன் தேடி வந்தான். முனிஸிபல் டி.பி-யில் தங்கினான். பலர் அவனைத் தரிசித்தார்கள். பழனியும் போனான்.
பழனி போனபோது டி.பி-யில் கப்பல் கார் நின்றிருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு வெளியே கூட்டம். நன்கொடை, தலைமை தாங்க அழைப்பு, ராசிக்கையால் ஜவுளிக் கடை திறக்க வேண்டுகோள் - இப்படி கோரிக்கைகள் மர பெஞ்சின் மீது காத்திருந்தன.
உள்ளேயும் மணியைச் சுற்றிக் கூட்டம். “அண்ணே... அண்ணே!” ஜன உரிமை புதுப் பணத்திற்கு அமெச்சூர்களை.
“என்னா பளனி, சௌக்கியமா... தொழில் எப்படி நடக்குது?”
ஆள் சிவந்து விட்டிருந்தது. கண்களில் கூட. பார்க்கக் கண் நிறைவு போன்று ஒரு பளபளப்பு.
“உன் ஃபேமிலி ஆக்ஸிலெண்ட்ல பூட்டுதாமே, கேள்விப்பட்டேன். ரொம்ப வர்த்தப்பட்டேன் பிரதர்.”
‘பிரதர்’ புதியது!
“ரொம்ப ஃபீல் பண்ணாதே... ஆங்... லைப் அப்பிடித்தான். ஜாஸ்தி அதையே நெனைச்சுக் கவலைப்படாதே!”
சீக்கிரமே பழனிக்குத் தான் தருவிக்கப்பட்டது ஏன் என்று புரிந்தது. போதிய அளவு மனிதன் அந்தஸ்தை அவனுக்குக் காட்டியும் மணி எதிர்பார்த்த பொறாமை பழனிக்கு வரவில்லை. கிளம்பி விட்டான். டி.பி-யை விட்டு வெளியே வரும்போது காத்திருந்தோர் பார்த்த பார்வையில் தன் மரியாதை உயர்ந்திருப்பது புலனாயிற்று.
மணியின் பெருமையை உலகிற்கு உணர்த்திய திரவத்தை நினைத்தான். சரோஜாவுக்கு வெற்றி! அவளோ அவள் கிளாஸோ தர முடியாத மயக்கம், இத்தனை பேர் கொண்டாடும் மணியின் வெற்றியில் நிரம்பியிருப்பது போல் ஒரு பிரமை.
நிறையாத அவன் வெறுமை நகர்ந்து செல்லும் கானல் போல் இப்போது மணியின் திசைக்கு விலகிற்று. பழனி கடை மூடி விடுவது என்று தீர்மானித்தான்.
பால் காய்ந்து விட்டது. குழந்தையின் பசிக்கு முதலிடம் கொடுத்தவர் கூடக் குடித்துவிட்டுப் போய்விட்டார். கிழவர் கொண்டு போன டம்ளர் வரவில்லை. மறந்து விட்டாரோ? இரண்டு ரூபாய் வாங்கி வைத்த முன்யோசனையில் லயித்து முன்பு வெட்கப்பட்டதைச் சுத்தமாக அழித்தான்.
அப்போது கிழவர் வந்தார். நடை மிகவும் தள்ளாடிற்று.
“இந்தாப்பா... இந்தப் புட்டியிலே இன்னொரு பால் ஊத்திடு.” அவர் குரல் அடைத்திருந்தது. அவரைப் பார்க்காமல் டம்ளரை வாங்கி வைத்த பழனி, பாட்டில் அழுக்காயிருப்பதைக் கவனித்தான்.
“ஏன் பெரீவரே... பாட்டிலே களுவிக் கொண்டாரக் கூடாது?”
பதில் வரவில்லை. விம்மல் ஓசை வந்தது பழனி திரும்பினான். அங்கவஸ்திரத்தை வாயில் புதைத்து அவர் குலுங்கிக் கொண்டிருந்தார்.
“என்னா விஷயம் பெரீவரே... ஏன் அழுவுறீங்க?”
“உங்க பால் தாம்பா என் பொண்ணுக்கு கடைசி ரொணம்.”
அவனுக்குப் பிடரி சிலிர்த்தது.
அவரை உற்றுப் பார்த்தான்.
“கொழந்தைக்குப் பால் வாங்கிணு போனா சீக்கா இருந்த தாய்க்காரி பூட்டாப்பா... கண்ணு சொருவற நேரத்திலே. போனேன். எல்லாரும் கடைசிப் பாலைவுட்டோம்... கொழந்தை கத்திணுகீது... அதான் இன்னொரு பாலுக்கு வந்தேன்...”
பழனிக்குக் காசு வாங்கப் பிடிக்கவில்லை...
“வச்சிக்கப்பா... இந்த எடத்திலே இந்நேரத்திலே போற உசிருக்கும், பச்சக் கொழந்தைக்கும் பால் காச்சிக் கொடுத்தியே, அதுவே பெரிய புண்ணியம்பா!”
சட்டென்று பழனியின் வெறுமை நிறைந்தது.
“கடையை மூடுவதா... என்ன செய்ய இருந்தோம்...” என்று யோசித்த பழனிக்கு, பால் வார்க்க யாருமின்றி மலைச்சரிவில் உருண்டு போன டூரிஸ்டு பஸ் கவனம் வந்தது.
தன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டதைத் தெரிவிக்கப் பழனி சரோஜாவிடம் போனான்... அவள் இல்லை... போலீஸ், சாராய வேட்டையில் அவளைப் பிடித்து விட்டிருந்தது.