பால் டம்ளர்
“நல்லா ஆத்தி ஒரு பால் குடுப்பா!”
திரும்பிப் பார்க்க வைக்கிற கனமான சுருதியில் வந்தது அந்த வெண்கலக் குரல். பால் கடை அடுப்பில் காய்ந்த பாத்திரத்தில் இருந்து கவிந்த நுரை ஒரு சிற்றொலியாக ஒலித்தது. அதை ஒரு அலுமினியக் கைப்பிடிகி பாத்திரத்திற்கு மாற்றி கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டே பழனி திரும்பினான்.
சந்தனக் கலர் கோட்டு, மழை வருமோ என்ற எதிர்பார்ப்பில் கக்கத்தில் இடுக்கிய குடை, ட்யூப் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் கடுக்கன் குடுமி. நெற்றியில் வியர்வை போக மிஞ்சி நிற்கும் சந்தனப் பொட்டு.
பால் கேட்டவரின் அங்க லட்சணங்களை அளந்த பழனி பெரியவருக்கு வயது அறுபதுக்கு மேல் என்று கணித்தான்.
பிறகு சொன்னான்.
“நேரம் ஆவும். பால் காயணும்.”
நுரை ஒலிக்கிற டம்ளர்களைப் பெஞ்சில் காத்திருந்தவர்களிடம் ஒவ்வொன்றாய் நீட்டியபடியே அவன் பதில் சொன்னான்.
பெரியவர் தொடர்ந்தார். “கால் மணி நேரமா கொழந்தை பாலுக்கு அழுவுது. அர்ஜண்டா வேணுமே!”
கிழவர் குரலில் பாலுக்கு அழும் குழந்தையின் தவிப்பு முட்டமிட்டது.
“நான் என்னாங்க பண்றது... இவங்க ரொம்ப நேரமா குந்திகினு இருக்காங்க.”
- மேடையிலிருந்து பால் நிரம்பிய டம்ளர் வரிசையில் ஒவ்வொன்றாய் யந்திரம் போல் எடுத்து உட்கார்ந்திருந்தவர்களிடம் நீட்டியபடியே பழனி பதிலளித்தான்.
கிழவர் அந்த டம்ளர்களையும் உட்கார்ந்திருந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்தார். ஏழு டம்ளர்கள் கரங்களில் ஏறி வாயைத் தீண்டிவிட்டன. பழனி நீட்டிய எட்டாவது டம்ளரைக் கடைசி நபர் வாங்கவில்லை.
“நான் வெய்ட் பண்றேன். பெரியவருக்குக் கொடுத்துடுங்க. குழந்தை அழுவுதாமே!”
கிழவர் நன்றியோடு அவனைப் பார்த்தார். மற்ற ஏழு டம்ளர்கள் எதையும் பொருட்படுத்த நேரமின்றிக் காலி ஆயின.
“பாட்டில் கொண்டாந்து இருக்கீங்களா?”
“இல்லியே. இந்தா ஒரு ரூபா அட்வான்ஸ், வச்சிக்கோ!’
“கொடுத்துட்டுப் போங்க. டம்ளர் வெலையே ரெண்டு ரூபா.”
“இந்தா!” கிழவர் அவசரமாக இன்னொரு ரூபாயை எடுத்து நீட்டினார். மீண்டும் ஒருமுறை பாலை விட்டுக் கொடுத்த நபரைப் பார்த்துப் புன்னகையில் நன்றி செலுத்தினார். பின், மெதுவாகத் தள்ளாடியவாறு நடந்தார்.
பழனி அந்தக் கிழவரிடம் இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கியதற்குத் தாமதமாக வெட்கப்பட்டான். இந்தக் காலத்தில் யாரை நம்ப முடிகிறது என்றொரு சமாதானம் பிறந்து அவன் தன்னை நியாயப்படுத்திக் கொண்டான்.
‘அந்த டம்ளர் போனாத்தான் என்னா... நாளையிலேருந்து எனக்கெதுக்கு டம்ளர்!’ என்று அவன் யோசித்தவாறே காயாத பாலுக்கு மேல் அலுமினியத் தட்டை மூடித் துணியில் பாத்திரத்தைப் பிடித்துப் பத்திரமாய்க் கீழே இறக்கி வைத்தான்.
கரியடுப்பில் சாம்பல்குவிந்திருந்தது. அடுப்பைக் கரித்துணியில் பிடித்து மேடையிலிருந்து கீழே இறக்கிக் ‘கடகட’வென்று அடித் தகட்டை ஆட்டிச் சாம்பலை உதிர்வித்தான்.
கை யந்திரமாய் ஓடி மிஞ்சிய நெருப்பின் மீது டின்னிலிருந்த கரித் துண்டுகளை எடுத்து நிரப்பியது. மனம் மட்டும் தண்ணீரில் சிந்திய எண்ணெயாக மிதந்தது.
“நாளைக்குக் கடை மூடி இருக்கறதைப் பாத்து வாடிக்கையா வர்றவங்க வந்து பாத்துட்டுத் திரும்பிப் போவாங்க. பஸ் ஸ்டாண்டிலே ‘குபார்’ கௌம்பிடும். காதும் மூக்கும் வச்சு புல்லாக்கு மாட்டி கதை வுடுவானுங்க. எல்லாருக்கும் இன்னிக்கே சொல்லிட்டிருந்தா நல்லதோ... ம்ஹுகும்... என்னான்னு சொல்றது... சொல்றது... சொல்றதுக்கு என்னா இருக்கு? யார் இருக்காங்க?”
பதினேழு வருஷமாக பஸ் ஸ்டாண்டிற்குப் பக்கத்தில் இரவில் பால் காய்ச்சி விற்று வந்த பழனி, திடீரென்று நேற்று இரவு கடையை மூடி விடுவது என்று தீர்மானம் செய்தான். அந்தத் தீர்மானத்தைப் பங்கிட்டுக் கொள்ள அவனுக்கு யாருமில்லை. கேரளா, மைசூர் என்று மூன்று வருஷத்துக்கு முன் சுற்றுப் பயணம் புறப்பட்ட ஒரு டூரிஸ்ட் பஸ்ஸில் பழனியின் குடும்பம் - அவன் அம்மா, மனைவி, மூன்று குழந்தைகள் - திரும்பி வரவில்லை. அந்த டூரிஸ்டு பஸ் ஒரு மலைச் சரிவில் கவிழ்ந்து நாலைந்து உயிர்கள் தப்பித்தன. அவர்கள் வேறு யாரோ. எனவே, அவன் செய்த தீர்மானத்தைப் பங்கிட்டு கொள்ளக் குடும்பம் இல்லை.
ஒருத்தி இருந்தாள். அவள்தான் இந்தத் தீர்மானத்திற்கே அவனை உந்தியவள். அந்த நகரத்திலிருந்து இரண்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்தவள். அங்கே அவளை சரோஜா என்று சொல்வதைவிட சாராயக்காரி என்று சொன்னால் சுலபமாக வீட்டைக் காட்டி விடுவார்கள்.
சரோஜா அந்தக் கிராமத்தை விட்டு முக்கால் மைலில் தொடங்கிய மலையில் ஒரு சிறு சாராயத் தொழிற்சாலை நடத்தி வந்தாள். நகரத்திற்கு அவள் சினிமா பார்க்க வந்தால் படம் முடிந்ததும் பழனி கடையில் பால் குடித்து விட்டுப் போவாள்.
ஐந்தாறு வருஷங்களுக்கு முன் பழனி கடையை விட்டுப் பல கடைகள் தள்ளி ஒரு கடையில் மசாலா பால் விற்று வந்த மணிக்கும் அவளுக்கும் சிநேகம் என்று பஸ் ஸ்டாண்டில் பேசுவார்கள். மணி கடையை மூடிவிட்டுப் பெங்களூர் போனான். அவள் பழனி கடைக்குப் பால் குடிக்க வந்தாள்.
குடும்பம் ஒரு நீர்க்குமிழி போன்று திடீரென்று வெடித்துப் போன சூன்யத்தில் அவன் சிதைந்து நின்ற சந்தர்ப்பத்தில் தான் சரோஜா அவன் கடையில் பால் குடிக்க வந்தாள்.
அன்று சரோஜா போகும் கடைசி பஸ் ரிப்பேராகி விட்டது. அன்று அவள் கண்மையோ, தாம்பூலக் கறை படிந்த பற்களோ பழனியின் தத்தளித்த மன நிலைக்கு ஒரு மயக்கம் தந்தது. பழனியின் வீட்டில் அவள் அன்றிரவு தங்கினாள்.
விடியற் காலை பஸ்ஸில் அவள் ஊருக்குப் புறப்பட்டதும், பழனியின் மயக்கம் தெளிந்தது. காலி வீடும் கழிந்துவிட்ட இரவும் நிரப்ப முடியாத சூன்யத்தின் நினைவுகளாய் நின்றன. விலகிய பின் மீண்டும் மூடியது போல் அவன் மனம் மூட்டம் கண்டது.
மூன்று நாள் கழித்து மீண்டும் சரோஜா நகரத்திற்கு வந்து பால் குடித்துவிட்டு பஸ்ஸுக்காகப் புறப்பட்டாள்.
பால் அன்று சீக்கிரம் தீர்ந்துவிடவே, அவளை சைக்கிளில் ‘டபிள்ஸ்’ உட்கார வைத்துக் கொண்டு, பழனி அவள் கிராமத்திற்குப் போனான்.
அன்றிரவு சரோஜாவுக்குப் பழனியின் மனசில் பாறாங்கல் தட்டுப்பட்டது பிளாஸ்டிக் கேனிலிருந்து ஒரு கிளாஸ் சாராயத்தைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். தெளிகிற மயக்கங்களால் நிரம்பாத அவன் வெறுமை அதில் சற்று மறந்தது.
அப்புறம் பழனி கடை மூடியதும் நேரே சரோஜாவின் கிராமத்திற்குப் போய் விடுவான். அவளும் அவள் தந்த சாராயமும் பழனியின் துயர்கள் ஒளியும் புகலிடமாயின.
“இத்தினி வர்ஷமா பால் கடை வச்சி ஏன்னா சம்பாரிச்சே?” என்று ஒருநாள் சரோஜா கேட்டாள்.
நகர்ப்புறத்தில் பழனி ஒரு மனை வாங்கி இருந்தான் வாங்கியதோடு சரி. கட்ட சௌகரியப்படவில்லை. எனவே, அவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.
“டசாலா பால் வித்துணு இருந்துதே மணி, அது இப்போ எங்கே இருக்குது தெரியுமா?”
“பெங்களூர்னு சொல்லிக்கினாங்களே.”
“என்ன செய்யிது, எப்படி இருந்ததுண்ணு சொன்னாங்களா?”
“இல்லே.”
“பெங்களூரிலே பெரிய பில்டிங் கட்டிடுச்சு. கட்டடம் பூரா சலவைக் கல் ‘தக தக’ன்னு ரொம்ப ஷோக்கா கீது. கன்னடத்திலே ஒரு படம் கூட எடுக்குதாம். கலர்ப்படம்.”
“அப்படியா?” - பழனி அக்கறையின்றிக் கேட்டான்.
“கப்பல் மாதிரி ஒரு கார் வச்சிருக்கு.”
“இதுக்கெல்லாம் அவனுக்குப் பணம்? எப்படிச் சம்பாரிச்சான்?”
சரோஜா, பழனி எதிரில் ஒரு நிரம்பிய கிளாஸை வைத்துச் சொன்னாள்:
“இதை வித்துத்தான் சம்பாரிச்சுது. மொதல்லே நாட்டுச் சரக்கு. அப்புறமா பீர். இப்போ பெங்களூர்லே மூணு பார் இருக்குதாம்.”
பழனி கிளாஸையே பார்த்தான்.
“ஒரு கிளாஸ் பாலை நீ என்னா விலைக்கு விக்கிறே?”
“ரெண்டு ரூபா.”
“இது பதினஞ்சு ரூபா.”
எதற்காக அந்த விலை விவரம் என்று அவளது மை படித்த கண்ணில் தேடினான் பழனி.
“பதினேழு வர்சமா பால் வித்துட்டு வாங்கின மனையிலே நீ வூடு கட்ட முடியாமே முளிக்கிறே. அஞ்சு வருசத்திலே அது பங்களா கட்டி, கார் வாங்கி, சினிமா எடுக்குது.”
தண்ணீர் மாதிரி நிறமற்றிருந்த அந்த திரவத்தைப் பார்த்தான் பழனி.
“பதினோருமணி வரிக்கும் நீ இடுப்பிலே துண்டைக் கட்டிக்கிணு நின்னுகிணே காலத்தைக் களிக்க வேண்டியது தான். வாங்கின மனையிலே வூடு கட்டறத்தை வுடு. ஒரு குடிசை கட்டக் கூட முடியாது.”
பழனி கிளாஸை எடுத்து, திடீரென்று வெளிப்பட்ட தன் வெறுமையை மூழ்கடிக்கக் கடகடவென்று குடித்தான். என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்ற பார்வையில் சரோஜாவை நோக்கினான்.
“என்னை என்னா பண்ணச் சொல்றே?”
“பால் கடையை மூடிட்டு நம்ம தொழிலைச் செய்யி... நான் ஒருத்தி ஒண்டிக் கட்டையா என்னா பேஜார்ப் பட்டுணுகிறேன். நீ என்னாடான்னா பதினோரு மணிக்கு ஆளு ஜல்சாவா சைக்கிள்ளே வர்றே. எட்டு மணிக்குக் கிளம்பிப் பூட்றே. அப்படி என்னா அங்கே பால் வித்து அம்பாரமா குமியறது கெட்டுப் போச்சு?”
பழனி குழம்பினான். அவன் போன பாதை நடுக்காட்டில் இரண்டாகப் பிரிந்த மாதிரி ஒரு தடுமாற்றம். திசை எது? எப்படிப் போவது என்று அவனுக்குத் தெரியவில்லை. தீர்மானிக்கவே மனசில் பிடிப்பில்லை.
சரோஜா, சாராயம் என்று ஒரு பாதையில் மின்மினி வெளிச்சம். இன்னொன்று மனப்பளு போன்ற இருள்.
பதினேழு வருஷம் நடந்து அதில் கால் தேய்த்த தடம். மற்றப்படி வெறுமை...
அவன் ஊசலாட்டம் அறிந்து சரோஜா விதையை ஆழ ஊன்றினாள். அவள் ஊற்றித் தந்த திரவத்தால் எண்ணம் மெதுவாய் வளர்ந்தது. அப்போது தான் மணி ஊருக்கு வந்தான். சொந்த ஊரில் அந்தஸ்தைக் காட்டும் உத்தேசத்தோடு ஹெலிகாப்டரில் ஷýட்டிங், ஏதோ லொகேஷன் தேடி வந்தான். முனிஸிபல் டி.பி-யில் தங்கினான். பலர் அவனைத் தரிசித்தார்கள். பழனியும் போனான்.
பழனி போனபோது டி.பி-யில் கப்பல் கார் நின்றிருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு வெளியே கூட்டம். நன்கொடை, தலைமை தாங்க அழைப்பு, ராசிக்கையால் ஜவுளிக் கடை திறக்க வேண்டுகோள் - இப்படி கோரிக்கைகள் மர பெஞ்சின் மீது காத்திருந்தன.
உள்ளேயும் மணியைச் சுற்றிக் கூட்டம். “அண்ணே... அண்ணே!” ஜன உரிமை புதுப் பணத்திற்கு அமெச்சூர்களை.
“என்னா பளனி, சௌக்கியமா... தொழில் எப்படி நடக்குது?”
ஆள் சிவந்து விட்டிருந்தது. கண்களில் கூட. பார்க்கக் கண் நிறைவு போன்று ஒரு பளபளப்பு.
“உன் ஃபேமிலி ஆக்ஸிலெண்ட்ல பூட்டுதாமே, கேள்விப்பட்டேன். ரொம்ப வர்த்தப்பட்டேன் பிரதர்.”
‘பிரதர்’ புதியது!
“ரொம்ப ஃபீல் பண்ணாதே... ஆங்... லைப் அப்பிடித்தான். ஜாஸ்தி அதையே நெனைச்சுக் கவலைப்படாதே!”
சீக்கிரமே பழனிக்குத் தான் தருவிக்கப்பட்டது ஏன் என்று புரிந்தது. போதிய அளவு மனிதன் அந்தஸ்தை அவனுக்குக் காட்டியும் மணி எதிர்பார்த்த பொறாமை பழனிக்கு வரவில்லை. கிளம்பி விட்டான். டி.பி-யை விட்டு வெளியே வரும்போது காத்திருந்தோர் பார்த்த பார்வையில் தன் மரியாதை உயர்ந்திருப்பது புலனாயிற்று.
மணியின் பெருமையை உலகிற்கு உணர்த்திய திரவத்தை நினைத்தான். சரோஜாவுக்கு வெற்றி! அவளோ அவள் கிளாஸோ தர முடியாத மயக்கம், இத்தனை பேர் கொண்டாடும் மணியின் வெற்றியில் நிரம்பியிருப்பது போல் ஒரு பிரமை.
நிறையாத அவன் வெறுமை நகர்ந்து செல்லும் கானல் போல் இப்போது மணியின் திசைக்கு விலகிற்று. பழனி கடை மூடி விடுவது என்று தீர்மானித்தான்.
பால் காய்ந்து விட்டது. குழந்தையின் பசிக்கு முதலிடம் கொடுத்தவர் கூடக் குடித்துவிட்டுப் போய்விட்டார். கிழவர் கொண்டு போன டம்ளர் வரவில்லை. மறந்து விட்டாரோ? இரண்டு ரூபாய் வாங்கி வைத்த முன்யோசனையில் லயித்து முன்பு வெட்கப்பட்டதைச் சுத்தமாக அழித்தான்.
அப்போது கிழவர் வந்தார். நடை மிகவும் தள்ளாடிற்று.
“இந்தாப்பா... இந்தப் புட்டியிலே இன்னொரு பால் ஊத்திடு.” அவர் குரல் அடைத்திருந்தது. அவரைப் பார்க்காமல் டம்ளரை வாங்கி வைத்த பழனி, பாட்டில் அழுக்காயிருப்பதைக் கவனித்தான்.
“ஏன் பெரீவரே... பாட்டிலே களுவிக் கொண்டாரக் கூடாது?”
பதில் வரவில்லை. விம்மல் ஓசை வந்தது பழனி திரும்பினான். அங்கவஸ்திரத்தை வாயில் புதைத்து அவர் குலுங்கிக் கொண்டிருந்தார்.
“என்னா விஷயம் பெரீவரே... ஏன் அழுவுறீங்க?”
“உங்க பால் தாம்பா என் பொண்ணுக்கு கடைசி ரொணம்.”
அவனுக்குப் பிடரி சிலிர்த்தது.
அவரை உற்றுப் பார்த்தான்.
“கொழந்தைக்குப் பால் வாங்கிணு போனா சீக்கா இருந்த தாய்க்காரி பூட்டாப்பா... கண்ணு சொருவற நேரத்திலே. போனேன். எல்லாரும் கடைசிப் பாலைவுட்டோம்... கொழந்தை கத்திணுகீது... அதான் இன்னொரு பாலுக்கு வந்தேன்...”
பழனிக்குக் காசு வாங்கப் பிடிக்கவில்லை...
“வச்சிக்கப்பா... இந்த எடத்திலே இந்நேரத்திலே போற உசிருக்கும், பச்சக் கொழந்தைக்கும் பால் காச்சிக் கொடுத்தியே, அதுவே பெரிய புண்ணியம்பா!”
சட்டென்று பழனியின் வெறுமை நிறைந்தது.
“கடையை மூடுவதா... என்ன செய்ய இருந்தோம்...” என்று யோசித்த பழனிக்கு, பால் வார்க்க யாருமின்றி மலைச்சரிவில் உருண்டு போன டூரிஸ்டு பஸ் கவனம் வந்தது.
தன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டதைத் தெரிவிக்கப் பழனி சரோஜாவிடம் போனான்... அவள் இல்லை... போலீஸ், சாராய வேட்டையில் அவளைப் பிடித்து விட்டிருந்தது.
No comments:
Post a Comment