வேரோட்டம்
சிலர் ஊர் எல்லைப் பிள்ளையார் கோயிலோடு நின்று கொண்டார்கள். சிலர் பஸ் ஸ்டாண்டிலே நின்று கொண்டார்கள். சிலர் தான் பதினோரு கி.மீ, கடந்து ரயில் நிலையத்திற்கு வந்தவர்கள்.
ஒருவர் குமரவேல் ஆசாரி. அவர்தான் தாளக்கட்டை போடுகிறவர். ஆள் குள்ளம் கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு திருட்டு முழி. அடுத்து மொட்டையப்ப கவுண்டர். எப்பவோ ஒரு கச்சேரியில் பாலக்காடு மணி ஐயர் வாசிப்பைப் பார்த்து விட்டுத் தன்னை ஓர்ஏகலைவனாகப் பாவித்துக் கொண்டு தலையை உருட்டு உருட்டென்று உருட்டுகின்ற ஆசாமி. அவர்தான் மிருதங்கம். தடவித் தடவி ஆன மொட்டை போல சதா ஒரு தலை தடவல்.
அடுத்து ஒரு பஜனை தவறாமல் விளக்குத்தண்டைப் பிடித்துத் திரிந்த பூபாலன். அரை நிஜார் போட்ட காலத்தில் அவன் தண்டைப் பிடித்தான். அடுத்த ஆனியிலோ ஆவணியிலோ அவனுக்கும் கால் கட்டு விழுந்து விடும். பெண் பார்க்கிறார்கள்.இனிமேலும் மார்கழி பஜனையில் விளக்குத் தண்டு தூக்கும் பொறுப்பிற்கு வருகிறவள் அனுமதி வேண்டும்.
ஆள் நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டான். பதினெட்டாம் போருக்கு நடுகிற அர்ஜுனன் தவசு மரம் மாதிரி. இருந்தாலும் அதே பவ்யம். விளக்குத் தண்டு தூக்குவது அவன் பட்டா பாத்தியம் போல் அதே ஈடுபாடு. ஆணிக் குத்து மாதிரி ஊன்றிப் பார்த்து உட்கிரகிக்கிற அதே ஊமைப்பார்வை.
சமயத்தில் “தடிமாடு மாதிரி முழிக்கிறியே! பிள்ளைவாள் வீட்டிலே வௌக்குக்கு ஊத்த எண்ணெய்ச் சொம்போட நிக்கிறாங்க! முண்டமே, தண்டு தூக்கினா மட்டும் போறுமா?” என்று இரைந்தாலும் சிவுக் கென்று தூக்கம் கலைந்த மாதிரி நாதமுனி நாயுடுவின் கீர்த்தனைக் கிறக்கத்திலிருந்து விடுபட்டு த தலை உதறும் விழிப்புணர்வு அதே பணிவு.
இவர்களெல்லாம் வரவேண்டியவர்கள், ஒரே கோஷ்டி. வந்திருக்கிறார்கள். ஆனால் விடிவெள்ளி வில்லாளன் வரவேண்டிய ஆளல்ல. அந்தக் காலத்தில் நாஸ்திகர். அப்புறம் கழகம் உடைந்து கட்சி கட்சியாகப் பிளக்கிற சமயத்தில் டக்கென்றுதிக்குத் திசை தெரியாமல் ஓரிடத்தில் நின்று விட்டவர்.
பஜனை என்றால் பூசணிக்காயைப் போட்டு உடைப்பவர் போல அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு, உண்டு இல்லையென்று வேரறுக்க வந்துவிடுவார்.
அவரும் வந்திருந்தார்.
மார்கழியிலும் சரி, குரு பூஜை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜயந்தி என்று
பண்டிகையிலும் சரி. பஜனை கோஷ்டி அவர் வீட்டு முற்றத்தைத் தாண்டி, வீடு திரும்புகிற வரை தலையைச் சுவருக்கு முட்டுக் கொடுத்து சாய்மானத் திண்ணைத் திண்டில் முதுகு சாய்த்துப் போட்ட காலை அகற்றாமல் மார் மேல் கட்டிய கையை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர். அவர் கூட வந்திருந்தார்.
இன்னும் எவ்வளவோ பேருக்கு ஸ்டேஷன் வரை வரப் பிரியமுண்டு. நாதமுனி நாயுடுவுக்கும் தெரியும். போக வர பஸ் செலவு. அரைநாள் வேலை கெடல். இப்படி அசௌகர்யங்கள். புரிந்தது.
விடிவெள்ளி கிராமத்தில் வேலைக்கா பஞ்சம்? அருகில் உள்ள மலைக்காடு விறகு வெட்ட வா, வா என்று கூப்பிட்டுக் கொண்டேயிருந்தது.
வயலும் வரப்பும், மாடும் கன்றும், திரிக்கிற கயிறும் உரிக்கிற நாரும். யோசித்தால் சோம்பிச் சுகம் காண்பது போல் தோன்றும் கிராமம், கைராட்டையில் ஓயாமல் நூல் ஓடுகிற மாதிரி சன்ன இழையாக இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
ஹைதராபாத்தில் இதெல்லாம் இருக்கப் போவதில்லை டோங்கா வண்டி, கார், பஸ் என்று கண் மண் தெரியாத வேகம். இரைச்சல், யந்திர மமகாரம், நாகரித்தின் வேஷ மாற்றம், மனசு தெரியாது,தெரிவிக்காது முகமூடி அணிந்த மனிதர்கள்.
யார் கண்டது?
அங்கும் மனிதர்கள் இருக்கலாம். போகப் போகத் தெரியும்.
“என்னா நாயுடு! ஊரை விட்டுட்டுப் போறமேன்னு துக்கமா இருக்கும்.”
குமரவேல் ஆசாரி, “இருக்காதா பின்னே! பொறந்து வளர்ந்த ஊரு” என்று இடை வெட்டினார்.
மொட்டையப்ப கவுண்டர் தலையைத் தடவிக் கொண்டே, “அந்திம காலத்தை நாயுடு மாமா இங்கேயே கழிச்சுடணும்னு தான் பிரியப்பட்டாரு” என்று சுருதி போட்டார்.
பூபாலன் கையில் இப்போதும் விளக்குத் தண்டு இருப்பவன் போல் பேசாமல் இருந்தான்.
நாதமுனி நாயுடுவுக்கு ஆட்காட்டி விரலில் முதல் மடக்கு நீளத்துக்கு நரைத்த தாடி தலை வெளுத்து மாமாங்கம் ஆகிவிட்டது. இமை விளிம்பைத் தொடாத விழிப்பாவை. தணதணவென்று எப்பவும் அக்கினி இருக்கிற மாதிரி ஒரு சிம்மப் பார்வை. ஒரு சமயம் பண்டாரம் மாதிரி, ஒரு சமயம் ரிஷி மாதிரி ஒரு முகத்தோற்றம்.
இவர்களுக்கு என்ன சொல்வது?
மலைப்பாதையில் கிணுகிணுக்கும் மாட்டு மணியோசை... நாடு காத்தான் மலைப்பாறையில் துயிலும் சூரியன் பார்க்காத சுனை, சேணியம்பாடி மேட்டிலிருந்து வண்டி இறங்கும் போது அந்த பள்ளத்தில் தானாகக் கொப்புளிக்கும் தெம்மாங்கு...
என்னென்ன நஷ்டங்கள்... என்னென்ன பறிமுதல்கள்...
‘ம்ஹூம்... இதுதான் கால ஓட்டம்!”
நாதமுனி நாயுடு சிரித்தார். புகையிலை படாத, வெற்றிலைக் கறை படாத வயோதிகப் பற்கள் இன்னும் வெண்மை மாறவில்லை.
“நாம் என்ன பண்றது வில்லாளன்! பிராப்தம் அவ்வளவுதான். ருணம் தீர்ந்தா பந்தம் பட்டுணு விட்டுடும்! ஒங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லே.”
வில்லாளன் தொண்டையைச் செருமிக் கொண்டார். “என் நம்பிக்கைக்கு என்ன நாயுடு அவசியம்?”
“நல்லாச் சொன்னீங்க!” என்று மொட்டையப்பன் தலையை உருட்டினார்.
“நாயுடு மாமா நெலத்தை வித்தது என்னமோ சரி! வீடு வித்திருக்கக் கூடாது.”
“நான் என்னா பண்ணட்டும்! பசங்க ஆட்சி வந்தாச்சு. ப்ளாட் மட்டும் எழுபத்தையாயிரம்னான் பெரியவன், சின்னவன் மொஸைக் இல்லாம எப்படி வீடு கட்டுவேன்னான்! ரெண்டும் ஜீரணமானா தான் அங்கே வீடு எழும்பும்” என்று வேதாந்தி போல வலக்கை விரித்துத் தாடியைச் சொறிந்தார்.
“சாமான்லாம் லாரியிலே போயாச்சா?” என்று விசாரித்தார் வில்லாளன்.
“ஒரு வாரமாச்சு! புதனோட புதன் எட்டாவது நாள். கௌம்பணும் கௌம்பணும்னு பார்க்கிறேன். எட்டு நாளா ஊர் முழுக்க விருந்து. நான் யாருக்குப் போடப் போறேன்? மண்டையைப் போட்டா தந்தி வர ஒருநாள். இங்கேயிருந்து அவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு யார் வரப்போறாங்க?”
நாயுடு குரலில் துக்கமில்லை. வெறும் விவகாரம் பேசுகிற தொனி. பேச்சு பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தாலும் மனசு எங்கோ!
ராஜ வீதி திரும்பி ஒரு நிலைக்குத்து. மெல்ல பஜனைக் கோவிலருகில் ஒரு நிறுத்தம். கையில் ஹார்மோனியம். பின்னங்கழுத்தில் வார்ப்பட்டை உறுத்தாமல் பாந்தமாக உட்கார்ந்து தொங்க, விரல்கள் அதன் மேல் இழைகின்றன.
மொட்டையப்பன் தலை உருண்டு உருண்டு மிருதங்கம் ஜமாய்க்கிறது. சுருதிக் கணக்கின்படி தாளக் கட்டையைக் குமரவேல் ஆசாரி போட்டுக் கொண்டு நிற்க, பூபாலன் நிஷ்காம்யமாக விளக்குத் தண்டைத் தாங்கிக் கொண்டு வீடு வீடாக எண்ணெய் வசூலிக்கிறான். எண்ணெய்க் குளத்தில் சில்லறைக் காசுகள் தெறித்துக் கொண்டு விழுகின்றன.
“தெறிக்கிற மாதிரி போடக் கூடாது. மொள்ளமா எண்ணெய்க்குள்ள நழுவுற மாதிரி தான் காசு போடணும்!” கோடி வீட்டு மங்கம்மாப் பாட்டி பேரனுக்குச் சொல்லித் தருகிறாள்.
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்”
நாதமுனி நாயுடு கண்ணை மூடிக்கொண்டு நாதப் பிரம்மத்தில் மூழ்குகிறார்.
அடியாழம் தெரியாமல், மிதந்து நீந்த மனசு வராமல் சரசரவென்று பாதாளம் தொடுகிற நிர்ச்சிந்தையான முழுக்கு.
வீடுகளில் கைவேலையைப் போட்டுவிட்டு வெளியே பெண்கள் நிற்கிறார்கள்... ஆண்கள் நிற்கிறார்கள். வயலுக்கு ஓட்டிச் செல்லப்படும் மாடு நிற்கிறது. மேய்க்கப் புறப்பட்ட ஆட்டுமந்தை நிற்கிறது. சுற்றுகிற பம்பரங்கள் நிற்கின்றன. உருளுகின்ற கோலிகள் நிற்கின்றன.
பாதாளம் தொட்டுவிட்டு நாயுடு மேல் எழுகிறார். ஆகாச கங்கைதான் இலக்கு மாதிரி ஸ்தாயி கூடுகிறது. மோர்க்காரி தலை மீது மொந்தையுடன் இடுப்பில் கை வைத்து நிற்கிறாள்.
“நாயுடு போன பெறவியிலே தேனாபிஷேகம் பண்ணியிருப்பார்!”
“அட, வண்டி ஓட்டிக்கினு இருந்த நாயுடுப்பா இவுரு. சேணியம்பாடி ரோட்லே இவர் பாடின தெம்மாங்கைக் கேக்கணுமே!”
“நாப்பது வருஷமா விடாம பஜனை பாடிட்டு வர்றாரு. அதான் பகவான் அவரை நல்ல நெலமைலே வெச்சிருக்கான்.”
மனசு வெள்ளாள வீதியிலிருந்து செங்குந்தர் வீதிக்குத் திரும்புகிறது.
இரண்டு பக்கமும் பாவு கட்டிய இடைவெளி வழியில் கோஷ்டி நடக்கிறது. ஓடுகின்ற தறி ஒலிகள் நிற்கின்றன. சுழலுகின்ற ராட்டினக் கடகடப்பு நிசப்தமாகிறது.
“புழுவாய்ப் பிறக்கினும்
புண்ணியா நின்னடி”
ராக சஞ்சாரத்தில் நேற்று தொட்ட வான உயரத்தை இன்று மிஞ்சிய பரவசக் களிப்பில் மூடிய கண்களிலிருந்து ஆனந்தம் முத்து முத்தாய் உதிர்கிறது.
எத்தனை நடை! எத்தனை பயணம்! எத்தனை மார்கழி! எத்தனை நிம்மதி!
தொண்டை கட்டவில்லை. இப்போது ரயில்வே ஸ்டேஷனில் ஹார்மோனியத்தைக் கையில் கொண்டு வந்து கொடுத்தாலும் கணீரென்று ஆலய மணி நாதம் போல் பாட்டு பிறந்து விடும்.
“இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரி... நமக்கு நாமே என்னவோ ஆயிடறதா கண்ணை மூடிக் கற்பனை பண்ணி மனசை எங்கியோ அடமானம் வெச்சுடற கதை நாயுடு!” - இப்படி ஒரு சமயம் இதே வில்லாளன்.
“மனசு ஒரு பாரம்தானே வில்லாளன்! அதை எங்கியோ கொண்டு போய் எறக்கிட வேண்டியிருக்கு. ஏதாவது ஒரு சுமை தாங்கியிலே.”
அப்புறம் ஒரு விவாதம். முடிவேயில்லாத விவாதம், வில்லாளன் விட்டுக் கொடுத்த சரித்திரம் இல்லாத விவாதம் - கடைசியில் மௌனம் கண்டெடுக்கும் மகத்தான நிம்மதி.
எல்லாவற்றுக்கும் காலையில் கோயில் மூலையில் மூட்டை முடிச்சு போட்டாயிற்று. இனி ஹைதராபாத். அங்கே யாருக்கு வேண்டியிருக்கப் போகிறது இதெல்லாம்!
வேண்டப்பட்டவனுக்குக் கூட அதிகம் வேண்டியிருக்காது. ஒரு பிடி அவல் மாதிரி. ஏதோ கொறித்தோமா, விட்டோமா என்று ஓடுகிற ரயிலைப் பிடிக்க உட்கார்ந்திருக்கிற அவசரத்தில் ஒரு காதில் கொஞ்சம் போட்டுக் கொண்டு ஒரு கண்ணை அங்கே இங்கே மேய விட்டுக் கொண்டு.
நாயுடுவுக்குத் தூக்கம் வரவில்லை. அதுவெல்லாம் வரக்கூடிய வயது போய் விட்டது. ஆனால் ஓர் உறுத்தல் இருந்தது. வளை வளையாகத் தோண்டிக் கொண்டு ஒரு பெருச்சாளி மண்ணை வெளியே வெளியே தள்ளி விடுகிற மாதிரி இன்னும் உளைச்சல் பூர்த்தியாகாத மாதிரி ஓர் உறுத்தல்.
மொட்டையப்பனும் குமரவேலும் எழுந்து ஸ்டேஷன் பிளாட்பாரக் கடையில் வாழைப்பழமும் பிஸ்கெட்டும் வாங்கி வரக் கிளம்பினார்கள்.
“அதெல்லாம் வேண்டாம்யா!”
“வழியிலே சாப்பிடுவீங்க நாயுடு! நீங்க போய் வாங்கியாங்க!” என்ற அவர்களை வில்லாளன் விரட்டினார் அவர்கள் நகர்ந்தனர்.
விளக்குத் தண்டு பூபாலன், நாயுடு அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சிலிருந்து தள்ளி இரண்டடி மரியாதை விட்டுக் கீழே உட்கார்ந்திருந்தான்.
“என்ன முகம் வாட்டமாயிருக்கு நாயுடு?”
“ஒங்களுக்குச் சொல்லி என்ன புண்ணியம்?”
“நான் நாஸ்திகன் என்பீங்க. பரவால்லே. சொல்லுங்க.”
“ஒங்களுக்கு ஏன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத் தோணுச்சி வில்லாளன்?”
வில்லாளன் சிரித்துவிட்டார். “இதென்ன கேள்வி?”
“கேள்வி கேள்விதான். பதில் சொல்லுங்க.”
“இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க! மொதல்லே இப்படிக் கேக்கவே கூடாதுங்க.”
“சரி கேட்கக் கூடாது கேட்டுட்டேன். ஏன் வந்தீங்க? ஒரு பாசமா?”
“இல்லே.”
“ஒரு பிரியம்... அதானே!”
“அப்படி இல்லே கணக்கு! பிரியம் இருக்கறவங்க, என்னைவிட ஜாஸ்தியா ஒங்கமேல் பிரியம் வெச்சிருக்கிறவங்க எத்தனையோ பேர் உண்டே!”
“மடக்கிட்டீங்க! சரி... பின்னே?”
“அதானே சொல்லிட்டேனே?”
“கேக்க வாணாங்கறீங்களா?”
வில்லாளன் மசிந்துவிட்டார்.
“அடாடாடா... நீங்களும் விட மாட்டீங்க நாயுடு! நம்ப ஊர்லே ஒங்களுக்கு அப்புறம் இனிமே பாட்டுப் பாட யார் ஆளு?”
நாயுடுவின் அந்தரங்கத்தின் மீது அடி விழுந்தது. பலமான அடி, உறுத்தல் உளைச்சல், மீது விழுந்த அடி.
“என்னமோ பொளுது மொளைச்சா பொளுது போனா லவுட்-ஸ்பீக்கரை வெச்சு நாலா பக்கமும் ஊளையிடறாணுங்க. ஒரே சினிமாப் பாட்டு, அங்கே வாரியா இங்கே வாரியான்னு சில்லறைப் பாட்டு. அசல் பாட்டு... மனுஷன் மனசை அசத்துற பாட்டு பாட இனிமே ஆளு யாரு நாயுடு? என்னமோ அதை நெனச்சுட்டிருந்தேன். மனசு தாங்கலே.”
நாயுடு கண்களை மூடிக் கொண்டார்.
இதுதான்... இதுதான்... வம்சக் கொடி அறுந்த மாதிரி, தூக்கிய கொடியை வாங்கப் பின்னால் ஆளற்றுப் போன மாதிரி அந்த உறுத்தலுக்கு வடிவம் இதுதான். இதுவேதான்.
“வில்லாளன்! நீங்க நாஸ்திகனாக முடியாது!” என்றார் நாயுடு கண் திறந்து.
“ஆகாட்டா போறேன்! அது ஒங்க அபிப்பிராயம் தானே!”
நாயுடுவின் பார்வை விளக்குத் தண்டு பூபாலன் மேல் விழுந்தது.
“ஏண்டா பூபாலா... மாமா சொல்றதைக் கேட்டியா?”
“கேட்டுட்டுத்தானுங்க இருக்கேன்.”
“தடி மாடு மாதிரி தண்டு தூக்கிட்டுத் திரிஞ்சியே... எத்தினி பாட்டு பாடியிருப்பேன்? எதா... ஒரு பாட்டுப் பாடு.”
அவன் வெட்கத்தோடு சிரித்துவிட்டு அந்தத் திட்டு கூட ஓர் ஆசீர்வாதம் போல் தலைகுனிந்தான்.
“பாடுடான்னா... கல்யாணப் பொண்ணாட்டம் தலை குனியறியே! வர்ற ஆனியிலே மணைமேல ஒருத்தி வந்து உட்காருவா... அவ பக்கத்திலேயும் தலையைக் குனிஞ்சுக்காதே!”
“போங்க நாயக்கரே!” அவன் இன்னும் நாணினான்.
“நாயுடு பாடச் சொல்றார்லே... பாடேண்டா!”
“ஐயய்ய... இங்கியாங்க! ரயில்வே ஸ்டேஷனு.”
“இவரு பெரிய சங்கீத வித்வான்! மேடை போட்டுப் பாடச் சொல்வாங்க. பாடுடா சோம்பேறி.”
டமாரென்று பாட ஆரம்பித்து விட்டான் பூபாலன்.
“தில்லை அம்பல நடராஜா.”
பிடரியில் அறைந்தது போல் நிமிர்ந்து உட்கார்ந்தார் நாயுடு. ஒரு பாட்டு முடிந்தது.
“பச்சை மாமலை போல் மேனி பாடுடா!”
வாழைப்பழம், பிஸ்கெட் வாங்கிக் கொண்டு மொட்டையப்பனும், குமரவேல் ஆசாரியும் திரும்பி விட்டனர்.
“கேளுங்க ஐயா... நம்ப பூபாலன் பாடறான். எங்கேடா கத்துக்கிட்டே... ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு!”
நாயுடுவின் அதே ராக சஞ்சாரம். அதே ஸ்தாயி. அதே ஆரோகண அவரோகணம். அதே முழுக்கு. அதே பாய்ச்சல். அதே பறப்பு.
“அடேய்... அடேய்...அடேய்...”
நாயுடு மூன்று பாட்டு முடிந்ததும் எழுந்து போய் அவனை மார்போடு கட்டிக் கொண்டார். அதுதான் அவரால் முடிந்த பாராட்டு.
“வில்லாளன்! உம்ம கொறை நீங்கிப் போச்சா?” என்ற மார்பிலிருந்து பாறாங்கல் அகன்ற மாதிரி ஒரு பூரிப்போடு கண்களில் ஆனந்தம் முத்து முத்தாய்க் கொப்புளிக்கக் கேட்டார். உறுத்தல் ஓய்ந்து உபாதை நீங்கிய ஆசுவாசம்.
கணகணவென்று ஸ்டேஷனில் ரயில் வருவதற்கான மணியோசை கேட்டது. அது ஹைதராபாத் போகும் வண்டிதான்.
No comments:
Post a Comment